அரசுப் பள்ளிகளில் இருந்து 3 லட்சத்துக்கும் மேலான மாணவர்கள் நீக்கம்... மாநில அரசின் அதிரடியால் கல்வியாளர்கள் கலக்கம்!

By காமதேனு

பீகார் மாநிலத்தின் அரசுப் பள்ளிகளில் இருந்து 3 லட்சத்துக்கும் மேலான மாணவ மாணவியர், கல்வித் துறை அதிகாரிகளால் பள்ளியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பீகார் மாநிலத்தின் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியரில் தொடர் விடுப்பு எடுப்பவர்களை கண்டறிந்து அவர்களை பள்ளியிலிருந்து நீக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இந்த வகையில் உரிய காரணம் மற்றும் அனுமதியின்றி 15 நாட்களுக்கும் மேலாக பள்ளிக்கு வராத மாணவர்களில் 3,32,000 பேர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வகுப்பறை

பீகார் மாநிலத்தில் கொரோனா காலத்துக்குப் பின்னர், முறையாக பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்த கணக்கெடுப்பு அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. அதில் உரிய அனுமதியின்றி தொடர் விடுப்பில் இருந்த 4 லட்சத்துக்கும் மேலான மாணவர்களின் பெற்றோருக்கு, விளக்கம் கேட்டும் அதிகாரிகள் அறிவுறுத்தல் விடுத்தனர். தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு வராதது தொடர்பாக முறையான விளக்கமும், இனி ஒழுங்காக பள்ளிக்கு வருவதை உறுதிப்படுத்தும் உறுதிமொழியும் பெற்றோர்களிடம் இருந்து பெறப்பட்டன. பின்னர் அவர்களின் பிள்ளைகள் மீண்டும் பள்ளியில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

அறிவுறுத்தலையும் மீறி பள்ளிக்கு வராத மாணவர்களின் பெயர்களை அதிகாரிகள் கணக்கெடுத்தனர். பின்னர் அவ்வாறு தொடர்ந்து விடுப்பில் இருந்த 3,32,000 மாணவர்களை நீக்குவதாக அறிவித்தனர். முன்னதாக, 75 சதவீத வருகை இருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என்ற பள்ளிக்கல்வித்துறையின் கெடுபிடியால் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அடுத்தபடியாக 3 லட்சத்துக்கும் மேலான மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது பெற்றோர் மற்றும் கல்வியாளர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

வகுப்பறை

அரசுப் பள்ளிகள் என்பவை பின்தங்கிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் நலனுக்கானவை. பள்ளிக்கு மாணவர்கள் ஒழுங்காக வராது போனால், ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறையினர் அதற்கான காரணத்தை கண்டறிந்து, பெற்றோர்களை அழைத்து விசாரித்து மாணவர் வருகையை சரி செய்ய வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக மாணவர்களை பள்ளியிலிருந்து நீக்கம் செய்வது அரசுப் பள்ளியின் நோக்கத்தையே பாழடிப்பதாக கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE