ஆசிரியர்கள் கண்டித்ததால் மாணவன் தற்கொலை?... உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு!

By காமதேனு

புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவன் தற்கொலை தொடர்பாக உறவினர்கள் மற்றும் சக மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை அருகே விஜயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணையா. இவர் நெடுஞ்சாலைத்துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாரிகண்ணு. இவர்களுக்கு மகரஜோதி என்ற மகளும், மணிமுத்து மற்றும் மாதேஸ்வரன் என்ற 2 மகன்களும் இருந்தனர்.

இதில் மாதேஸ்வரன், புதுக்கோட்டை தஞ்சை சாலையில் மச்சுவாடி அருகே உள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வேளாண்மை பிரிவில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். இதற்கிடையே மாதேஸ்வரன் தலைமுடி அதிகமாக வளர்த்து, தாடி வைத்து வந்ததால் தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் முடியையும், தாடியையும் வெட்டி விட்டு வருமாறு கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.

மாதேஸ்வரன்

நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியில் அனுப்பி முடி சரியாக வெட்டிவிட்டுத்தான் பள்ளிக்கு உள்ளே வரவேண்டும் என்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர். அப்படிச் சென்ற மாதேஸ்வரன் உள்ளிட்ட மூன்று மாணவர்களில் இரண்டு பேர் மட்டும் பள்ளிக்கு திரும்பி வந்தனர். மாதேஸ்வரன் மட்டும் வரவில்லை என்று தெரியவந்தது. அதன்பிறகு பள்ளிக்கு அருகில் இருக்கும் காட்டுப் பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில் மாதேஸ்வரன் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த புதுக்கோட்டை போலீஸார், மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவரின் தற்கொலைக்கு ஆசிரியர்களின் அலட்சியம் தான் காரணம் என்று மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன் திரண்டுள்ள மாணவரின் உறவினர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை அரசு முன்மாதிரி பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ் புதுக்கோட்டை டிஎஸ்பி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE