பகீர்... அடுத்தடுத்து பள்ளியில் மயங்கி விழுந்த மாணவர்கள்... தூக்க மாத்திரை சாப்பிட்டதால் பரபரப்பு!

By காமதேனு

கடலூர் மாவட்ட சிதம்பரம் அருகே அரசு பள்ளி மாணவர்கள் சத்து மாத்திரை என நினைத்து தூக்க மாத்திரை சாப்பிட்டதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்துள்ள அக்கரை ஜெயங்கொண்டபட்டினத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் லதா. இவர், பள்ளியில் படிக்கும் கனிஷ்கா என்ற மாணவிக்காக கால்சியம் மாத்திரையை வாங்கி வந்துள்ளார்.

அதை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று மாலை கனிஷ்காவை கால்சியம் மாத்திரையை எடுத்து சாப்பிடக் கூறியுள்ளார். ஆனால், கனிஷ்கா அந்த மாத்திரையை எடுப்பதற்கு பதிலாக, ஆசிரியர் பயன்படுத்தும் தூக்கமாத்திரை டப்பாவை திறந்து அதில் இருந்த மாத்திரையைச் சாப்பிட்டுள்ளார்.

மாத்திரை

அதேபோல், நான்காம் வகுப்பு படிக்கும் ஹரிதர்ஷன், ஹரிணி, ரக்ஷ்யா, மற்றும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஹரிஷ் , ஆதவன், ராதாகிருஷ்ணன், ஆகியோரும் கால்சியம் மாத்திரை என நினைத்து தூக்க மாத்திரையைச் சாப்பிட்டுள்ளனர். அடுத்த சிறிது நேரத்தில், அனைவருக்கும் மயக்கம் வந்துள்ளது. இதுகுறித்த தகவலறிந்த ஆசிரியை உள்ளிட்டவர்கள் உடனடியாக மாணவர்களை ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அண்ணாமலை நகர் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். மாணவர்கள் தூக்க மாத்திரையை சாப்பிட்ட விவகாரம் பெரும் அதிர்ச்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE