ஆஹா... அஹத் அகமது... சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டி படித்தவர்; நீதிபதியாக உயர்ந்தார்!

By காமதேனு

உத்தரபிரதேசத்தில் சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டியபடி படித்த இளைஞர், தனது தளராத முயற்சியினால் நீதிபதியாக உயர்ந்திருக்கிறார்.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள பராய் ஹராக் கிராமத்தை சேர்ந்தர் ஷோத் அகமது. இவர் தனது கிராமத்தில் ஒரு குடிசையில் சைக்கிள் டியூபுக்கு பஞ்சர் ஒட்டும் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அப்சனா பேகம். இவர் பெண்களுக்கு துணி தைத்து கொடுக்கிறார். இவர்களுக்கு 3 மகன்கள். மூத்த மகன் சமத் சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ளார். இளைய மகன் வஜாகத் தனியார் வங்கியில் மேலாளராக உள்ளார்.

பெற்றோருடன் அஹத் அகமது

ஷோத் அகமதின் 2-வது மகன் அஹத் அகமது. இவர் கடந்த 2019-ம் ஆண்டு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தார். பின்னர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் உள்ள ஒரு வழக்கறிஞரிடம் ஜுனியராக சேர்ந்து தனது பயிற்சி பணியை தொடர்ந்தார். ஷோத் அகமதுவின் மகன்கள் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போதும், அதன் பின்னரும் தந்தைக்கு உதவியாக சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டும் பணியை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்த வகையில் வழக்கறிஞர் பயிற்சினூடே, தந்தைக்கு உதவியாக அஹத் அகமதுவும் பஞ்சர் கடையில் பணியாற்றி வந்தார். பயிற்சி வழக்கறிஞராக இருந்தபோதும், அஹத் அகமதுவின் ஆசை கனவு எல்லாம் நீதிபதியாக வேண்டும் என்பதுதான். கொரோனா முழு அடைப்பின்போது, அஹத் அகமது நீதிபதி தேர்வுக்காக பயிற்சி பெற விரும்பினார். ஆனால் குடும்பத்தின் ஏழ்மை சூழல் காரணமாக பயிற்சி நிறுவனத்தில் அவரால் சேர இயலவில்லை.

அஹத் அகமது

ஆனபோதும் மனம் சோராது முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதற்கிடையே அவருக்கு இலவச ஆன்லைன் பயிற்சியாளரின் உதவி கிடைத்தது. ஆன்லைன் வாயிலாக பயிற்சியை முடித்ததும், நீதிபதி பதவிக்கான தேர்வை அஹத் அகமது எழுதினார். 303 பதவிகளுக்கான தேர்வில் அவர் 157-வது இடத்தை பிடித்தார். இதனைத் தொடர்ந்து அவர் சிவில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அஹத் அகமது கூறுகையில், ”எங்கள் வீடு மிகவும் சிறியது. குடிசையில் வசித்த எங்களை பெற்றோர் கஷ்டப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி படிக்க வைத்தனர். கல்வியால் மட்டுமே ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் சக்தி உள்ளது. கல்வி மீது உள்ள நம்பிக்கையால் எங்களுக்கு பலன் கிடைத்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE