சேலை கட்டவிடாமல் தாய் தடுத்ததால் 7-ம் வகுப்பு மாணவி குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், புணேவில் உள்ள தேஹு ரோடு பகுதியில் உள்ள சிவாஜி வித்யாலயாவில் ரேகா(13, பெயர் மாற்றப்பட்டுள்ளது) 7-ம் வகுப்பு படித்து வந்தார். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ரேகா சேலை அணிய வேண்டும் என்று தனது தாயிடம் கேட்டுள்ளார். அதற்கு சின்னப்பெண்ணான நீ சேலை கட்டக்கூடாது என்று அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் ரேகா வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை ரேகா குளியல் அறைக்குச் சென்றார். அதன் பின் தாழ்போட்டு விட்டு உள்ளே கதறி அழுதுள்ளார். இதனால் பதறிப்போன அவரது பெற்றோர், ரேகாவை கதவைத் திறக்கச் சொல்லியுள்ளனர். ஆனால், ரேகா கதவைத் திறக்கவில்லை. இதனால் குளியல் அறையின் கதவை உடைத்துச் சென்று பார்த்த போது, சேலையில் தூக்கிட்டு ரேகா தற்கொலை செய்து கொண்டிருந்தார். இதைக் கண்ட அவரது பெற்றோர் கதறித் துடித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து ரேகாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலை கட்ட தாய் விடாததால் சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.