அடுத்த அதிர்ச்சி... தர்மபுரி அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்ததாக பரபரப்பு புகார்!

By காமதேனு

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பனைகுளம் அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்ததாக எழுந்த புகாரில் இன்னமும் தீர்வு கண்டபாடில்லை. அதற்குள் தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பனைக்குளத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின், குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்ததாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

பனைக்குளம் பள்ளியில் சுமார் 120-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு மாணவ, மாணவியர் குடிநீர் தேவைக்காக ஒரு தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் சேமிக்கப்படும் குடிநீரை, குழாய்கள் வாயிலாக மாணவ, மாணவிகள் அருந்தி வந்தனர்.

வேங்கைவயல் மேல்நிலைத்தொட்டி

இந்த நிலையில் இன்று காலை தொட்டியிலிருந்து வெளியேறிய நீர் கலங்கலாகவும், துர்நாற்றத்துடன் தென்பட்டது. இதனைத் தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் தொட்டியை ஆராய்ந்ததில், அதில் மனிதக் கழிவு இருந்தது அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான தகவல் வெளியானதில் கல்வித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பனைக்குளம் பள்ளிக்கு விரைந்தனர். அத்துடன் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொட்டியில் கலந்திருந்ததாக சொல்லப்படுவது மனிதக் கழிவா அல்லது அப்பகுதியில் நடமாடும் குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளின் கழிவா என்று விசாரணை தொடர்ந்து வருகிறது. மேலும் தடயவியல் துறையைச் சார்ந்தோரும் பனைக்குளத்தில் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE