சென்னை: காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கல்வி குறித்து பள்ளி மாணவர்களுக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்; பள்ளி மாணவர்களை இயற்கைச் சூழலை நேசிக்கச் செய்வதன் மூலம் காலநிலை நெருக்கடி மற்றும் பல்லுயிர் இழப்பு போன்ற உலகளாவிய பிரச்னைகளை தீர்க்கமாக அறிந்து அதற்கான தீர்வுகளை அவர்களே கண்டறியும் வகையில் உரிய பயிற்சி வழங்கப்படும் என்று கடந்த சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி, பள்ளி மாணவர்களுக்கு காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்வி மற்றும் அதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்வியாண்டு முழுவதும் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய சூழலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகளை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் நிலவுகிறது. இதற்காக பள்ளிகளில் சுற்றுச்சூழல் பட்டறைகள், தூய்மை இயக்கம், பசுமைப் போட்டிகள், பசுமை இயக்கங்கள், நெகிழி இல்லாத வளாகம் குறித்த நிகழ்வுகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனுடன் சுற்றுச்சூழல் கல்வியை வளர்த்துக்கொள்ளுதல், பள்ளிகளில் குறுங்காடுகள் அமைத்தல், விதைப்பந்து உருவாக்குவது குறித்தும் விளக்கம் தரப்படும். மேலும், பள்ளிகளில் விதைப்பெட்டிகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கி மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.