சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்... மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை!

By காமதேனு

மயிலாடுதுறை நகரில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக அங்குள்ள ஏழு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெறும் பள்ளிகளில் போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சிறுத்தை பதுங்கியிருக்கலாம் என கருதப்படும் பகுதி

மயிலாடுதுறை நகரில் செம்மங்குளம் என்ற பகுதியில் நேற்று முன் தினம் இரவு சிறுத்தை ஒன்றின் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, அப்பகுதியில் சிறுத்தையின் கால் தடம் இருந்தது உறுதியானது.

அதனைத் தொடர்ந்து, சிசிடிவி பதிவுகளைப் பார்த்ததில் சிறுத்தையின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. நாய்கள் சிறுத்தையை துரத்திச் செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்தது. செம்மங்குளம் அருகில் சிறுத்தை சென்று பதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இடத்தில் வனத்துறையினர், காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், சிறுத்தை பதுங்கி இருப்பதாகக் கருதப்படும் கூறைநாடு, தெற்கு சாலிய தெரு, வடக்கு சாலிய தெரு, மேல ஒத்தசரகு, கீழ ஒத்தசரகு, செங்கழநீர் பிள்ளையார் கோயில் தெரு, பூக்கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் அடர்ந்த இடங்கள், மற்றும் பழங்காவிரி கரை பகுதிகளில், வனத்துறையினர் வலைகள் மற்றும் கயிறுகளுடன் தீவிரமாகச் சிறுத்தையைத் தேடி வருகின்றனர்

சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், சீர்காழி வன அலுவலர் ஜோசப் டேனியல், திருச்சி உதவி வன பாதுகாப்பு அலுவலர் செல்வம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சிறுத்தையை தேடிச்செல்லும் வனத்துறையினர்

சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க வனத்துறை சார்பில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் தகவல் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி கூறைநாடு பகுதியைச் சார்ந்த ஏழு தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க தேர்வு நடைபெறும் மூன்று பள்ளிகளுக்கு வனத்துறையினர், காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், பொதுமக்கள் எந்தவித அச்சமும் அடையத் தேவையில்லை. சிறுத்தை இருக்கும் இடம் தெரிந்தால் சீர்காழி வனச்சரக அலுவலரின் 9994884357 என்ற செல்போன் எண்ணுக்குத் தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE