மதுரை: நூறு கேள்விகளுக்கு பதில் தெரிந்த ஒரு மாணவனாக இருப்பதைவிட, ஒரு நல்ல கேள்வியை உருவாக்கத் தெரிந்த மாணவராக இருப்பதுதான் மிக முக்கியம் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் இன்று கப்பலூர் அரசு கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் அரசு கலை அறிவியல் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா கல்லூரி முதல்வர் க.லட்சுமி தலைமையில் இன்று நடைபெற்றது. வணிகவியல் துறைத் தலைவர் பா.சின்னச்சாமி, ஆங்கிலத் துறைத் தலைவர் பெ.சாவித்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில், மதுரை எம்பி சு.வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 400 மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கினார்.
பின்னர் எம்பி சு.வெங்கடேசன் கூறியதாவது: "மதுரை மாவட்டத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி மூன்று இருக்கிறது. அரசு மீனாட்சி கல்லூரி, மேலூர் அரசு கல்லூரி, கப்பலூர் அரசு கல்லூரி இந்த மூன்று கல்லூரி நிகழ்வுகளில் தொடர்ந்து ஏதாவது ஒன்றில் பங்கெடுப்பது ஒரு மக்கள் பிரதிநிதி என்ற முறையில் எங்களது கடமை என்ற உணர்வோடு இன்றைக்கு உங்கள் முன்னால் வந்து நிற்கிறோம். கல்வி சார்ந்த தகுதிதான் மற்ற எல்லா தகுதியையும் விட உயர்ந்தவை.
இதனால் தான் நமது மூதாதையர் ‘பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்றனர். கல்வி தான் மிக முக்கியமான ஒரு ஆயுதம். மேற்கத்திய நாடுகளில் பட்டமளிப்பு விழாக்களில் பேனாக்கள் வழங்கும் பழக்கம் உள்ளது. அதற்கு காரணம், இதுவரை நீங்கள் படித்ததை எழுதினீர்கள். பட்டம் பெற்ற பின் ஒரு தகுதியான மனிதராக முழு கல்வி அறிவு பெற்றவராகிவிட்டீர்கள். இனி உங்களது சிந்தனையில் தோன்றியதை எழுதி வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பது தான் பேனா வழங்குவதின் அர்த்தம்.
» சிஎஸ்ஐஆர் மைய நிறுவன தின விழா: விஞ்ஞானிகளுடன் மாணவர்கள் கலந்துரையாடல்
» காலாண்டு தேர்வு விடுமுறை அக்.6 வரை நீட்டிப்பு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
நூறு கேள்விகளுக்கு பதில் தெரிந்த ஒரு மாணவனாக இருப்பதைவிட ஒரு நல்ல கேள்வியை உருவாக்கத் தெரிந்த மாணவனாக இருப்பதுதான் மிக முக்கியம். அந்த வகையில் இதுநாள் வரை கேள்விகளுக்கு பதில் எழுதி பரீட்சையில் தேர்ச்சி பெற்றிருப்பீர்கள். இனி நல்ல கேள்விகளை உருவாக்கும் மாணவர்களாக நீங்கள் மாற வேண்டும். கல்வி மூலம் சாதிக்க பொருளாதாரம் ஒரு தடையில்லை. உங்கள் கனவை உயர்வாக வைத்துக் கொள்ளுங்கள், லட்சியத்தை உயர்வாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் நீங்கள் வெல்ல முடியும்" என்று சு.வெங்கடேசன் கூறினார்.
இதில், தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணிதவியல் துறையை சேர்ந்த 400 மாணவ, மாணவிகள் பட்டங்கள் பெற்றனர். முன்னதாக கணிதவியல் துறைத் தலைவர் ஹரி நாராயணன் வரவேற்றார். முடிவில் தமிழ்த் துறைத் தலைவர் பெ.சுமதி நன்றி கூறினார். இதில் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.