சிஎஸ்ஐஆர் மைய நிறுவன தின விழா: விஞ்ஞானிகளுடன் மாணவர்கள் கலந்துரையாடல்

By சி.பிரதாப்

சென்னை: சிஎஸ்ஐஆர் மையத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு அதன் ஆய்வகங்களை பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டு விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடினர்.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி குழுமத்தின் (சிஎஸ்ஐஆர்) நிறுவன தின விழா சென்னை தரமணியில் உள்ள அதன் வளாகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சிஎஸ்ஐஆர் மையத்தின் அனைத்து ஆய்வகங்களும், திரிசூலத்தில் அமைந்துள்ள கோபுர வடிவ கட்டுமானங்களின் சோதனை நிலையமும் பொதுமக்கள் பார்வைக்காக இன்று காலை 9.30 முதல் மாலை 3 மணி வரை திறந்திருந்தன.

இதனைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர், ஆசிரியர்கள், தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் என 9,200-க்கும் மேற்பட்டோர், இந்த ஆய்வகங்களை ஆர்வத்துடன் பார்வையிட்டனர். அவர்களுக்கு இங்குள்ள தொழில்நுட்பங்கள், உற்பத்திப் பொருட்கள், கட்டமைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டன.

இது குறித்து கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மைய தகவல் அதிகாரி ஆர்.டி.சதீஷ்குமார் நிருபர்களிடம் கூறும்போது, "சிஎஸ்ஐஆர் மையத்தின் கீழ் கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது. இதற்கு நாடு முழுவதும் 37 விதமான ஆய்வு மையங்கள் உள்ளன. இதன் நிறுவன தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் செப்டம்பர் 26ம் தேதி பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும். அதன்படி இன்றைய நிகழ்வில் ஏராளமானவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சித் திட்டங்களை நேரில் கண்டு விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடினர். மேலும், கட்டுமான பொறியியலின் வகைப்பாடுகள் தொடர்பாக அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இவை அறிவியலை மக்களிடம் கொண்டு செல்ல உதவிகரமாக இருக்கும்" என்று சதீஷ்குமார் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE