நுண்கலை படிப்பை கலைப்படிப்பாக மாற்ற கூடாது: புதுச்சேரி பாரதியார் பல்கலைக் கூட மாணவர்கள் போராட்டம்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: தொழில்நுட்ப கல்வியான நுண்கலை படிப்பை கலைப்படிப்பாக மாற்றும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதியார் பல்கலைக் கூடத்தில் மாணவ - மாணவியர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூட நுண்கலைத் துறை மாணவ -மாணவியர் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக் கூடத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் போராட்டம் தொடர்பாக அவர்கள் பல்கலைக்கூட முதல்வரிடம் மனுவும் அளித்தனர்.

இதுகுறித்து அந்த மாணவ - மாணவியர் கூறியதாவது: "பாரதியார் பல்கலைக்கூடம், தொழில்நுட்பக் கல்வியான நுண்கலைத் துறை (Fine Arts) படிப்பான ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட்ஸ் (Arts and Crafts) படிப்பை கலை மற்றும் அறிவியல் (Arts and Science) கல்வியாக மாற்ற கலைப் பண்பாட்டுத் துறைச் செயலர் தன்னிச்சையாக புதுச்சேரி பல்கலைக் கழகத்திற்கு எழுதிய கடிதத்தைத் திரும்பப் பெற வேண்டும். நுண்கலைத் துறைப் படிப்பான ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட்ஸ் படிப்பு ஏஐசிடிஇ அங்கீகாரத்துடன் தொடர வேண்டும்.

கடந்த இருபது ஆண்டுகளாக புதுடெல்லி அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) ஒப்புதல் பெற்று நடத்தப்படும் நுண்கலைத் துறை தொழில்நுட்பப் படிப்பான ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட்ஸ் படிப்பு ஏஐசிடிஇ அங்கீகாரத்தை பெற மறுத்தாலோ அங்கீகாரத்தைத் திரும்ப பெற்றுக் கொண்டாலோ அந்த படிப்பை நடத்தக் கூடாது. அதற்காக வழங்கப்படும் பட்டம் செல்லாது என்று ஏஐசிடிஇ கூறியிருக்கும் நிலையில், கல்லூரி நிர்வாகம் தொடந்து நுண்கலைத் துறையின் தனித் தன்மையை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதைக் கைவிட வேண்டும்.

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் நுண்கலைத் துறையை இணைக்க வேண்டும். நுண்கலைப் படிப்பு தொழில்நுட்ப கல்வியில் வராது என்று பொய் ஆவணங்களை கொடுத்து கலைப் பண்பாட்டு துறைச் செயலரை திசை திருப்பிய முன்னாள் முதல்வர் பி.வி.போஸ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நுண்கலைத் துறை மற்றும் நிகழ் கலைத் துறை என இரண்டாக பிரிக்க வேண்டும்" என்று மாணவர்கள் கூறினர்.

அதிக அளவில் மாணவர்களைக் கொண்ட நுண்கலைத் துறைக்கு தனியாக, முதல்வரை நியமிக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் அறப்போராட்டம் நடத்தினோம். இதுபற்றி கல்லூரி முதல்வரிடம் மனு அளித்துள்ளோம்" என்று மாணவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE