தமிழகத்தில் 4 முதல் 8- ம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணையில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல் கட்டத் தேர்தல் நடத்தப்படுவதை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை மூலம் பள்ளி இறுதித் தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 12-ம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடித்து 13-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தேர்வு அட்டவணையில் சிறிய மாற்றம் செய்து தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் 'தமிழக பள்ளிக் கல்வியில் இந்த கல்வியாண்டுக்கான (2023-24) இறுதித் தேர்வுகளை நடத்துவது குறித்து ஏற்கெனவே உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளித் தேர்வுகளின் தேதியை மாற்றி அமைக்குமாறு சட்டப் பேரவை உறுப்பினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்படி 4 முதல் 8- ம் வகுப்பு வரையிலான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகளை 10.4.2024 மற்றும் 12.4.2024 ஆகிய தேதிகளுக்கு பதிலாக 4.4.2024 மற்றும் 6.4.2024 ஆகிய தேதிகளில் பள்ளி அளவிலேயே நடத்திக் கொள்ள வேண்டும்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட உருது பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கி, துறை சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் உரிய அறிவுரைகளை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும்'என்று குறிப்பிடப்பட்டுள்ளது.