உதகை: பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு மே 27 மற்றும் 28-ம் தேதிகளில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் உதகையில் நடக்கிறது.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ராஜ்பவனில் மே 27 மற்றும் 28-ம் தேதிகளில் தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் இரண்டு நாள் மாநாடு நடக்கிறது. மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார்.
ஆராய்ச்சியின் சிறப்பம்சம், நிறுவன மேம்பாடு, தொழில்முனைவோரை ஊக்குவித்தல், ஆசிரிய உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாடு, உலகளாவிய மனித விழுமியங்களை ஊக்குவித்தல் போன்ற பல விஷயங்களில் விரிவான விவாதங்கள் இந்த மாநாட்டில் நடக்கவிருக்கின்றன.
மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆர்.என்.ரவி மாநாட்டின் தொடக்க மற்றும் நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் உரையை ஆற்றுவார். மாநாட்டின் தொடக்க அமர்வின் போது பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவின் தலைவர் பேராசிரியர் எம்.ஜெகதேஷ் குமார், சிறப்புரை ஆற்றுகிறார்.
» கோவையில் கனமழை: மரம் விழுந்து வாகனங்கள் சேதம்; சாலைகளில் வெள்ளம்
» கோவை, திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரம்
மாநாட்டின் முதல் நாளில், தஞ்சை சாஸ்தரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர். எஸ்.வைத்தியசுப்ரமணியம் எழுதிய, ‘நிறுவன மேம்பாட்டுத் திட்டம் - பல்கலைக்கழகங்களுக்கான தொலைநோக்கு ஆவணம், கட்டிட ஆராய்ச்சி சிறப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு எதிர்காலம் குறித்து ஐஐடி-காரக்பூர் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் பார்த்தா சக்ரபர்தி விளக்குகிறார்.
சிஸ்கோ இஞ்ஜினியரிங் தலைவர் ஸ்ருதி கண்ணன் ’புதுமை மற்றும் தொழில்முனைவு’ என்ற தலைப்பிலும், அவினாசிலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோம் சயின்ஸ் மற்றும் பெண்களுக்கான உயர்கல்வியின் துணைவேந்தர் டாக்டர் பாரதி ஹரிசங்கர், ‘தேசிய கடன் கட்டமைப்பின் மூலம் வாழ்நாள் முழுவதும் கற்றலை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பிலும் உரையாற்றுகின்றனர்.
மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டின் போது, ‘பல்கலைக்கழகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த நடைமுறைகள்’ பற்றிய விளக்கங்களை துணை வேந்தர்கள் வழங்குவார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து மாநிலப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக் கழகங்கள் மற்றும் மத்தியப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் இந்த இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்கிறார்கள். இந்த மாநாட்டில் பங்கெடுப்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு உதகை வருகிறார்.