சென்னை: தமிழக அறிவியல் அறிஞர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்று பேசிய அமைச்சர் பொன்முடி, ஆராய்ச்சி மனப்பான்மையை மாணவர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்றார்.
உயர்கல்வித் துறையின் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில் தமிழக அறிவியல் அறிஞர் விருது வழங்கும் விழா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. உயர்கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலர் சா.வின்சென்ட் வரவேற்புரை வழங்கினார்.
உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2018, 2019, 2020, 2021-ம் ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் அறிவியலாளர்களின் கண்டுபிடிப்புகளை பாராட்டி பெருமைப்படுத்தும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 43 பேருக்கு தமிழக அறிவியலறிஞர் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
தஞ்சாவூர் இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகத்தின்முன்னாள் இயக்குநர் சி.அனந்தராமகிருஷ்ணன், சென்னை பல்கலைக்கழகத்தின் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் தேசியமையத்தின் இயக்குநர் சு.பாலகுமார், தமிழ்நாடு கால்நடையியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பா.தென்சிங் ஞானராஜ், கல்லூரிக் கல்வி சென்னை மண்டல இணை இயக்குநர் ஆர்.ராவணன், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறை தலைவர் எம்.சுமதி, திருச்சி என்.ஐ.டி வேதியல் துறை தலைவர் எஸ்.வேல்மதி, நாமக்கல் கால்நடைக் கல்லூரிமற்றும் ஆய்வு நிறுவனத்தின் முதல்வர் எம்.செல்வராஜூ, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் க.இரவிஉள்பட 43 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
பின்னர் விழாவில் அமைச்சர் பேசியதாவது: ஆய்வு மனப்பான்மை, அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க தான் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. அறிவியல் தொழில்நுட்பம் என்பது அறிவியல் படிப்பவர்களுக்கு மட்டுமல்ல. கலை படிப்பவர்களும் அறிவியல் ரீதியாக ஆய்வு செய்கின்ற மனப்பான்மையை வளர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையர் டி.ஆபிரகாம், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஜெ.பிரகாஷ், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் பேராசிரியர் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.