விருதுநகரில் இடைநின்ற 1,306 மாணவர்களை நேரில் சந்தித்த அதிகாரிகள்: மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

By இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 15 நாட்களுக்கும் மேலாக பள்ளிக்கு வராமல் உள்ள 1,306 இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து, அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு மாணவர்கள் மீண்டும் கல்வியைத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் மாணவர்கள் 100 சதவிகிதம் பள்ளி படிப்பை முடிப்பதற்கும், பள்ளி படிப்பு முடித்து உயர் கல்வி சேர்வதையும் உறுதி செய்யும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் மாவட்ட நிர்வாகம் மூலம் எடுக்கப்பட்டு, தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 2024 வரை மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரங்களில் 9 முதல் பிளஸ்-2 வரை அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 113 மாணவர்களும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 53 மாணவர்களும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 30 மாணவர்களும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 82 மாணவர்களும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 74 மாணவர்களும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 168 மாணவர்களும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் 67 மாணவர்களும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 338 மாணவர்களும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் 62 மாணவர்களும், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 137 மாணவர்களும், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் 182 மாணவர்களும் என மொத்தம் 1,306 மாணவர்கள் தொடர்ச்சியாக 15 நாட்களுக்கும் மேலாக இடைநிற்றல் மாணவர்களாக கண்டறியப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), துணை ஆட்சியர்கள், துணைக்காவல் கண்காணிப்பாளர் மற்றும் வட்டாட்சியர்கள் உட்பட அலுவலர்களுக்கு ஒவ்வொரு அலுவலர்களுக்கும் தனித்தனியாக இடைநின்ற மாணவர்களின் விபரங்கள் கொடுக்கப்பட்டு, ஒவ்வொரு அலுவலர்களும் நேரில் சந்தித்து, இடைநிற்றலுக்கான காரணம் அறிந்து, குறைகளை நீக்கி, மீண்டும் பள்ளியில் சேர நடவடிக்கை எடுக்கும் வகையில் மாணவர்களை நேரில் சென்று சந்தித்து, இடைநிற்றலுக்கான காரணங்கள், குறைகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்வதற்கான கள ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் விருதுநகர் நகராட்சி பகுதிகளில் பள்ளிகளில் 9 முதல் பிளஸ்-2 வரை இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் இன்று மாணவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று சிறப்பு கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறும் காரணங்களின் அடிப்படையில், அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு, பள்ளியில் சேர்வதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி, நிதியுதவி, மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE