மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பள்ளிகளில் கோடை விடுமுறை ஏப்ரல் 13-ம் தேதியே தொடங்குவதாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குகிறது. முதல் கட்ட தேர்தல் தமிழ்நாட்டில் தொடங்குவதால் அந்தப் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டும் என்பதால் பள்ளிகளில் இறுதித் தேர்வுகளை உடனடியாக நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழ்நாடு அரசு உள்ளது. இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் இது குறித்த சுற்றறிக்கை அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி இறுதித் தேர்வுகளை ஏப்ரல் இரண்டாம் தேதி தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். 13- ம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
மேலும் அனைத்து ஆசிரியர்களும் தேர்தல் குறித்து நடைபெறும் பயிற்சி உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் பங்கு பெற வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் 23.4.2024 முதல் 26.4.2024 வரை விடைத்தாள்கள் திருத்துதல், தேர்வு முடிவுகளை வெளியிடுதல், அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆகிய பணிகளில் ஈடுபட வேண்டும். 26.4.2024 இந்த கல்வியாண்டின் கடைசி வேலை நாளாக இருக்கும். அடுத்த கல்வி ஆண்டில் பள்ளிகள் தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கல்வித் துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 4- ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பதால் அதற்கும் ஆசிரியர்கள் பணி செய்ய வேண்டியிருக்கும். எனவே அதன் பின்னர் ஜூன் இரண்டாவது வாரத்தில் அல்லது மூன்றாவது வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று தெரிகிறது.
இதையும் வாசிக்கலாமே...
தமிழகம் முழுவதும் பரபரப்பு... ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ரெய்டு!
பூட்டு நகரை கோட்டை விட்ட அதிமுக... கொந்தளிக்கும் ரத்தத்தின் ரத்தங்கள்!
32 தமிழக மீனவர்களை விடாமல் விரட்டி கைது செய்த இலங்கை கடற்படை... படகுகளும் பறிமுதல்!
குரூப் 2 நேர்முகத்தேர்வுக்கு தயாராக இருங்க... அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!