அதிர்ச்சி... நீட் தேர்வுக்குப் படிக்க வந்த மாணவி திடீர் மரணம்... கோட்டாவில் தொடரும் சோகம்

By காமதேனு

கோட்டா நீட் பயிற்சி மையத்தில் படிக்க வந்த ஜார்க்கண்டைச் சேர்ந்த மாணவி டெங்குவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் ஏராளமான நீட் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 3 லட்சம் மாணவர்கள் கோட்டா நகரில் உள்ள பல்வேறு பயிற்சி மையங்களில் நீட், ஐஐடி ஜெஇஇ உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இங்கு பயிற்சி பெற வரும் மாணவர்கள், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் விவகாரம் பெரும் பிரச்சினையாக மாறி வருகிறது. இந்த 2023-ம் ஆண்டு தொடங்கியதிலிருந்து இதுவரை நீட் தேர்வுக்கு படித்து வந்த 24 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக கோட்டா நகரில் உள்ள அனைத்து பயிற்சி மையங்களும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு எவ்வித தேர்வும் நடத்தக் கூடாது என்று அந்த மாவட்ட ஆட்சியர் ஓ.பி. புன்கார் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார்.

சினேகா

இந்த நிலையில், கோட்டாவில் தங்கி நீட் தேர்விற்குப் படிக்க வந்த மாணவி, டெங்குவால் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிஎஸ்என்எல் அதிகாரியின் மகளான சினேகா, கோட்டாவில் உள்ள தல்வாண்டி பகுதியில் தங்கி நீட் தேர்விற்குப் படித்து வந்தார்.

இவர் கடந்த 5 நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து இந்திரா விகாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சினேகா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் வென்டிவேட்டரில் வைக்கப்பட்டார்.

மருத்துவ பரிசோதனையில் அவருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சினேகாவிற்கு பல உறுப்புகள் செயல் இழந்தன. இந்த நிலையில், நேற்று மாலை அவர் உயிரிழந்தார். ஆனால், தனியார் மருத்துவமனையில் மற்றும் மருத்துவக் கல்லூரியில் இருந்து இதுவரை அறிக்கை வரவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். டெங்குவால் நீட் மாணவி பலியான சம்பவம் கோட்டாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE