அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர்கள் காரைக்குடி மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிடலாம்!

By சி.பிரதாப்

சென்னை: காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவன (சிக்ரி) வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி வசதிகளை பார்வையிட பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்; "காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CECRI-Central Electro Chemical Research Institute) தனது வளாகத்தில் உள்ள அனைத்து ஆய்வகங்கள் மற்றும் வசதிகளையும் செப்டம்பர் 26ம் தேதி பார்வையிட ஏற்பாடு செய்துள்ளது. இந்த நாளில் பொதுமக்கள் அந்த நிறுவன வளாகத்துக்குள் சென்று அனைத்து ஆய்வக வசதிகளையும் தடையின்றி பார்வையிட்டு வரலாம்.

இந்நிகழ்வில் ஆய்வக உதவியாளர்கள் பலர் பங்கேற்று ஆய்வக வசதிகள் குறித்த தெளிவு பெறவும், அதை அரசுப் பள்ளி மாணவர்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்தவும் விரும்புகிறோம். எனவே, மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி வழங்கி அதை பணி நாளாக கருத்தில் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு நேரடி நியமனம் பெற்ற பள்ளி ஆய்வக உதவியாளர் சங்கம் சார்பில் கடிதம் மூலமாக கோரப்பட்டுள்ளது.

எனவே, மாணவர்களின் நலன் கருதி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவன நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்துகொள்ள விருப்பமுள்ள ஆய்வக உதவியாளர்களை மாவட்டத்துக்கு 2 பேர் வீதம் அனுமதி வழங்கி, அனுப்ப வேண்டும். அந்த தினத்தை பணி நாளாக கருதவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது" என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE