மதுரை: ஏழை மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்கும் வகையில் மதுரையில் மூன்றாவது ஆண்டாக பிணையில்லாத கல்விக்கடன் ரூ.40 லட்சம் வழங்கி சாதனை படைத்துள்ளதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
மதுரை மாணவி சுஷ்மிதாவிற்கு பிணையில்லா கல்விக்கடன் வழங்கும் விழா இன்று தெற்கு மாசி வீதியில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் நடைபெற்றது. இதில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பங்கேற்று மாணவிக்கான கல்விக்கடன் ரூ.40 லட்சத்திற்கான சான்றிதழை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் யூனியன் வங்கி உயர் அதிகாரி உதய பாஸ்கர் சகாவ், மண்டல அலுவலக மேலாளர் சார்லஸ், உதவி மேலாளர் நேத்ரன், எம்பி அலுவலக உதவியாளர்கள் ராம மூர்த்தி, கோவிந்த ராஜன், மாணவியின் தந்தை ஆனந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து மாணவி சுஷ்மிதா கூறுகையில், "தனது தந்தை சிகை அலங்காரக் கடை வைத்துள்ளார். மிகவும் பின் தங்கிய குடும்பம். தனது தாய் வீட்டில் உள்ளார். ஒரு தம்பி படிக்கிறார். தான் பிஎஸ்சி மன்னர் கல்லூரியிலும், எம்எஸ்சி மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திலும் படித்தேன். மேலும் வெளிநாட்டில் பிசினஸ் மேனேஜ்மென்ட் படிக்க ஆசைப்பட்டேன். இது சாத்தியமாகும் என நம்பவில்லை.
பின்னர் மதுரை எம்.பி சு.வெங்கடேசன், மாணவர்களின் உயர்கல்விக்கு பல உதவிகள் செய்து வருவதை அறிந்து, அவரிடம் சென்று கேட்டேன். அவர் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி மேலாளர் சார்லஸ் பார்க்கச் சொன்னார். அவர் எந்த ஒரு பிணையுமின்றி ரூ.40 லட்சம் உயர்கல்வி கடன் வழங்கியுள்ளார். வங்கி மேலாளருக்கும், மதுரை எம்பி-க்கும் அவர்களுக்கும் நன்றியை தெரிவிக்கிறேன்" என்று மாணவி சுஷ்மிதா கூறினார்.
இதுகுறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கூறியதாவது: "இந்தியாவிற்கான ஒரு முன் மாதிரியான நிகழ்ச்சி. தமிழகத்தில் மதுரை மாவட்டம் கல்விக் கடன் வழங்குவதில் சாதனை செய்து வருகிறது. அதிலே முன் மாதிரியாக ரூ.4 லட்சம் வரை பிணையில்லாத கல்விக் கடன் வழங்கி வருகின்றோம். ஆனால் ரூ.40 லட்சம் வரை பிணையின்றி கல்விக்கடன் வழங்கும் திட்டத்தை யூனியன் பாங்க் ஆப் இந்தியா செய்து வருகிறது.
அவனியாபுரம் மாணவர் யோகேஸ்வர் ஆஸ்திரேலியாவில் உள்ள ஆடிலைட் பல்கலைக் கழகத்தில் படிக்க ரூ.40 லட்சம், அரசு மீனாட்சி கல்லூரி மாணவி சிந்து, இங்கிலாந்து நாட்டில் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள கார்டிக் பல்கலைக் கழகத்தில் படிக்க ரூ.30 லட்சம் பிணையின்றி கல்விக் கடன் வழங்கினர். தற்போது மூன்றாம் ஆண்டாக மாணவி சுஷ்மிதா இங்கிலாந்தில் உள்ள வேல்ஸ் மாகாணத்திலுள்ள கார்டிக் பல்கலைக் கழகத்தில் படிக்க ரூ.40 லட்சம் பிணையின்றி வழங்கியுள்ளனர்.
வங்கிகள் குறிப்பிடும் 260 பல்கலைக் கழகங்கள் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற கடிதத்துடன் வந்தால் ஒரு பைசா கூட செலவின்றி யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் நிச்சயம் கல்விக்கடன் வழங்குவர். மாணவர்கள் உயர்கல்விக்கு உறுதுணையாக இருப்பேன்" என்று எம்.பி. சு.வெங்கடேசன் கூறினார்.