அதிர்ச்சி... ரோந்து சென்ற எஸ்.ஐயை போதையில் தாக்கிய பள்ளி மாணவர்கள்!

By காமதேனு

தண்டையார்பேட்டையில் ரோந்துப் பணியின்போது விசாரணை செய்ய முயன்ற காவல் துறை உதவி ஆய்வாளரைச் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கிய பள்ளி மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை கொடுங்கையூர் மூலக்கடை அடுத்த அண்ணா நகர் 5-வது அவென்யூவைச் சேர்ந்தவர் பாலமுருகன் (56). இவர் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு எஸ்.ஐயாக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் தண்டையார்பேட்டை சுந்தரம்பிள்ளை நகர் வைத்தியநாதன் மேம்பாலம் அருகே சாதாரண உடையில் இவர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது மேம்பாலத்துக்கு கீழே சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த இளம் வயதினர் நான்கு பேரை அழைத்து விசாரணை செய்துள்ளார். அப்போது போதையில் இருந்த அந்த கும்பல், எஸ்.ஐ பாலமுருகனை ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது.

பின்னர் அந்த 4 பேரும் சேர்ந்து சுற்றிவளைத்து பாலமுருகனை கற்களாலும், கைகளாலும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பாலமுருகனுக்கு முகத்தில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு மூக்கு தண்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் வலியில் துடித்த அவர் சக காவலர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

அங்குசென்ற போலீஸார் பாலமுருகளை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அறிந்த வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல், எஸ்.ஐ பாலமுருகனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதையடுத்து ஆர்.கே.நகர் போலீஸார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் தாக்குதலில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் 4 பேரும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பதும், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களை போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ரோந்து சென்ற எஸ்.ஐயை போதையில் இருந்த பள்ளி மாணவர்கள் தாக்கிய சம்பவம் போலீஸார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE