மாணவர்களிடம் புகையிலை தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த யுஜிசி அறிவுறுத்தல்!

By சி.பிரதாப்

சென்னை: புகையிலை பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களிடம் தீவிர விழிப்புணர்வை கல்லூரிகள் ஏற்படுத்த வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இன்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: சமீபத்திய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் 13 முதல் 15 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களில் 8.5 சதவீதம் பேர் புகையிலையை ஏதேனும் ஒரு வடிவத்தில் பயன்படுத்துகின்றனர். ஆண்டுதோறும் 5,500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் புகையிலையை பயன்படுத்தத் தொடங்குகின்றனர். வாழ்நாள் முழுவதும் புகையிலையை பயன்படுத்துவோரில் 55 சதவீதம் பேர் 20 வயதுக்கு முன்பிருந்தே அதை உபயோகிக்க தொடங்கிவிடுகின்றனர்.

அதேபோல், எலெக்ட்ரானிக்ஸ் சிகரெட்கள் உடலில் மரபணு பாதிப்பு, கருவின் வளர்ச்சி, புற்றுநோய், சுவாச பிரச்சினைகள், இருதய மற்றும் நரம்பியல் கோளாறுகள் என பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கிறது. மேலும், புகையிலை மற்றும் எலெக்ட்ரானிக் சிகரெட்டுகள் பிற போதை பழக்கங்களுக்கும் ஆளாக காரணமாக அமைகின்றன. இது மாணவர்களின் கற்றல் திறனையும் பெரிதும் பாதிக்கும்.

இத்தகைய சூழலில் நாட்டின் எதிர்காலமாக விளங்கும் இளைய தலைமுறையினரை பாதுகாக்க வேண்டிய கூட்டுப் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. இதற்கிடையே, கல்வி நிறுவனங்களை புகையிலை இல்லாத வளாகமாக மாற்றுவதற்கு மத்திய சுகாதாரத்துறை திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அவை இந்த சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அதன்படி புகையிலைப் பொருள்களின் விற்பனை, பயன்பாடு தொடர்பாக சட்ட விதிகளை செயல்படுத்துதல், புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், எச்சரிக்கை வாசகங்கள், கல்வி நிறுவனங்களில் உள்ள கடைகளுக்கான கட்டுப்பாடுகள் என பல்வேறு அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

அவற்றைப் பின்பற்றி அனைத்து கல்வி நிறுவனங்களும் தங்கள் வளாகங்களை புகையிலை, எலெக்ட்ரானிக் சிகரெட் மற்றும் பிற போதைப் பொருள்களின் பயன்பாடில்லாத மையமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களிடம் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE