சர்வர்கள் ஸ்தம்பித்ததால் அவதி... நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

By காமதேனு

மருத்துவ உயர்கல்விக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீட் நுழைவுத்தேர்வுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று இரவுடன் முடிவடைந்த நிலையில், அதற்கான காவ அவகாசம் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவ மாணவியர்

மருத்துவராகும் கனவுடன் இருக்கும் மாணவ மாணவியருக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வாக ’நீட்’ விளங்குகிறது. இந்த வருடத்தின் நீட் நுழைவுத்தேர்வு மே 5 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க கடைசிநாளாக மே 09 அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் இரவு 11.50 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கடைசி 3 தினங்களாக ஒரே நேரத்தில் ஏராளமானோர் விண்ணப்பிக்க குவிந்ததில் சர்வர்கள் திணற ஆரம்பித்தன. நீட் நுழைவுத்தேர்வுக்கான நடைமுறைகள் நீண்டது என்பதாலும், பலமுறை ஓடிபி அடிப்படையில் விண்ணப்ப நடைமுறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லக்கூடியது என்பதாலும் சர்வர் கோளாறு பெரிதும் சோதித்தது.

இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் பதற்றம் அடைந்தனர். நேற்று நள்ளிரவு வரை விண்ணப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இவை தொடர்பான பெற்றோர்களின் குமுறல்கள் சமூக ஊடகங்களில் வெடித்தது. நீட் நுழைவுத் தேர்வுக்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.

நீட்

இதனையடுத்து நீட் நுழைவுத்தேர்வினை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமை, கால அவகாசத்தை மார்ச் 16 தேதிக்கு நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மார்ச் 16 அன்று இரவு 10.50 வரை நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு மேற்கொள்ளலாம் என்றும், 11.50 வரை கட்டண நடைமுறைகளை மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE