தெரு விளக்கு வெளிச்சத்தில் படித்த ஏழை பிள்ளைகள்; ஒளியேற்றி வைத்த தனியார் அறக்கட்டளை; மதுரை அருகே நெகிழ்ச்சி சம்பவம்!

By காமதேனு

மின் இணைப்பு பெற போதுமான வசதி இல்லாத நிலையில், தெரு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்த மாணவ மாணவியரின் வீட்டில் மின் விளக்கு எரிய உதவியதன் மூலம், அவர்கள் வாழ்வில் தனியார் அறக்கட்டளை நிர்வாகத்தினர் ஒளியேற்றியுள்ளனர்.

மின் வசதி இல்லாத நிலை

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட ஊர்மெச்சிகுளத்தை சேர்ந்தவர் சின்னையா ( 56), சமையல் உதவியாளர். இவரது மனைவி சுதா (41). தற்காலிக டெங்கு ஒழிப்பு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஜனனி (15) என்ற மகளும், கபிலேஷ் (11) என்ற மகனும் உள்ளனர். இதில் ஜனனி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பும், கபிலேஷ் 7-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இவர்கள் சொந்த இடத்தில் மண் மதில் வீடு கட்டி ஓடுகளால் மேற்கூரை அமைத்து வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டிற்கு நேற்று வரை மின்சார இணைப்பு இல்லை. காரணம், இவர்கள் வீட்டின் அருகில் மின்சார லைன்கள் எதுவும் செல்ல வில்லை. அதற்கு தனியாக மின் கம்பம் அமைத்தால்தான் மின் இணைப்பு வழங்கமுடியும் என மின்வாரியத்தினர் தெரிவித்து விட்டனர்.

புதிதாக மின் கம்பம் நட ரூ.20 ஆயிரத்திற்கும் மேல் செலவு ஏற்படும் என்பதாலும், பணவசதி இல்லாததாலும் மின் இணைப்பு பெற முடியாம அவதிப்பட்டு வந்தனர். இதனால் தெருவிளக்கு வெளிச்சத்தில் ஜனனி, கபிலேஷ் இருவரும் இரவு நேரங்களில் வீட்டு பாடங்கள் எழுதி, படித்து வந்தனர். இந்த எளிய மாணவ, மாணவியின் நிலை பற்றி தகவலறிந்த தனியார் அறக் கட்டளையினர் தங்களது சொந்த செலவில் மின்கம்பம் அமைக்க உதவ முன்வந்தனர்.

இதையடுத்து புதிய மின் கம்பம் அமைப்பதற்கும், மின் இணைப்பை பெறுவதற்குமான தொகையினை தனியார் அறக்கட்டளை நிர்வாகத்தினர் மின்வாரியத்திடம் செலுத்தினர். இதனை தொடர்ந்து மின் இணைப்பு கொடுப்பதற்காண பணிகள் விரைவாக நடந்தது.

இப்பணிகள் நிறைவடைந்த நிலையில் சின்னையாவின் வீட்டிற்கு நேற்று மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனால் இருள் சூழ்ந்து கிடந்த அவர்கள் இல்லத்தில் மின் விளக்கு ஒளிர்ந்தது. இந்த மின்இணைப்பு பெற்றுத் தந்த அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE