மத்தியப் பிரதேசத்தில் தேர்வு அட்டவணையை வெளியிட்ட பல்கலைக்கழகம் தேர்வு நடத்த மறந்த சம்பவம் மாணவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேச மாநில அரசின் ஆளுமையின் கீழ், ராணி துர்காவதி பல்கலைக்கழகம் ஜபல்பூரில் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவினருக்கு மார்ச் 5ம் தேதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இத்துறை மாணவர்கள் தேர்வுக்காக கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக தயாராகி வந்தனர்.
ஆனால், நேற்று தேர்வு எழுதுவதற்காக பல்கலைக்கழகத்திற்கு வந்தபோதுதான், அதிர்ச்சியூட்டும் ஒரு தகவல் தெரிய வந்தது. தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி இருந்த போதும், பல்கலைக்கழக நிர்வாகம் தயாராக இல்லை என்பது தெரியவந்தது. அதாவது தேர்வு அறிவிக்கப்பட்டதையே பேராசிரியர்கள் மறந்துவிட்டதால், தேர்வுக்கான வினாத்தாள் தயாரித்தல் உள்ளிட்ட எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர் அறையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து உடனடியாக விசாரணை மேற்கொண்ட துணைவேந்தர் ராஜேஷ்குமார் வெர்மா, விசாரணைக்கு உத்தரவிட்டதோடு தேர்வு நடத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ள இரண்டு பேராசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நடைபெற்ற தவறை ஒப்புக்கொண்டுள்ள பதிவாளர் தீபேஸ் மிஸ்ரா, விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதே சமயத்தில் தவறவிடப்பட்ட தேர்வு மார்ச் 7 முதல் 15ம் தேதி வரை நடைபெறும் எனவும் அவர் அறிவித்துள்ளார். பல்கலைக்கழகம் ஒன்று தேர்வை நடத்துவதையே மறந்த சம்பவம் மாணவர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்களிடையே பெரும் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ஷாக்... பிறந்த நாள் கொண்டாட காதலி வீட்டிற்கு சென்ற காதலன் அடித்துக் கொலை!
மருத்துவர்களின் 12 மணி நேர போராட்டத்தால் பெயிண்டருக்கு மீண்டும் கிடைத்த வாழ்க்'கை'
நான்கு மாநில விருதுகள்... பிரபல கதாசிரியர் மாரடைப்பால் திடீர் மரணம்!
நன்றி மறந்தாரா யுவன்?! சர்சையைக் கிளப்பும் ‘தென்மாவட்டம்’!
அடுத்தடுத்து வெளியாகும் ஆபாச புகைப்படங்கள்... 'வில்லேஜ் புட் பேக்டரி' க்கு வந்த சோதனை!