பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

By KU BUREAU

சென்னை: பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உட்பட 19 வகை துணை மருத்துவ படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்ப பதிவு தொடங்கியது.

தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு, மொழி, நோய் குறியியல்), பிபிடி, பிஎஸ்சி கிளினிக்கல் நியூட்ரிஷியன், பிஎஸ்சி கார்டியாக் டெக்னாலஜி உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவ படிப்புகள் உள்ளன. இவற்றில், அரசு மருத்துவகல்லூரிகளில் 2,200-க்கும் மேற்பட்ட இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 15 ஆயிரம் இடங்களும் உள்ளன.

இந்நிலையில், அந்த இடங்களில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஜூன் 21-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அதிகாரிகள் கூறும்போது, ‘‘இணையவழியில் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதல் சுற்று கலந்தாய்வு முடிந்த பிறகு, துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE