தேர்வுக்குத் தயாராகும் மாணவ மாணவியர் வீட்டில் இருக்கிறார்களா..? உங்களுக்கான டிப்ஸ் இதோ!

By எஸ்.சுமன்

தேர்வுக்குத் தயாராகும் மாணவ மாணவியருக்குத் தான் வழக்கமாக வழிகாட்டுதல் குறிப்புகள் பகிர்வார்கள். இங்கே நாம் பார்க்கப்போவது தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக, அவர்களின் குடும்பத்தினருக்கு அவசியமான குறிப்புகள். வாருங்கள் என்னவென்று பார்த்து விடுவோம்.

மாணவர்கள் தேர்வுக்கு படிப்பது, படித்ததை திருப்பி பார்ப்பது என பிஸியாக இருப்பார்கள். தேர்வுக்கே உரிய டென்ஷனோடும் தவிப்பார்கள். கண்விழித்து படிப்பது, உணவைத் தவிர்ப்பது, தேர்வுக்கு வேண்டிய எழுதுபொருட்களில் எதையாவது விட்டுச் செல்வது என அடிக்கடி சொதப்பி வைப்பார்கள். எனவே தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவியரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், இந்த தேர்வு தினங்களில் கடிந்துகொள்ளாது அனுசரணை மற்றும் அரவணைப்போடு இருப்பது அவசியமாகிறது.

தேர்வுக்கான தயாரிப்பு

ஏற்கனவே தேர்வு அச்சத்தில் உள்ளுக்குள் குமைந்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மேலும் கிலியூட்ட வேண்டாம். தேர்வு நெருக்கத்தில் புதிதாக எதையும் பெரிதாக படிக்க இயலாது. திருப்புதலுக்கு மட்டுமே அதிக நேரம் ஒதுக்க வேண்டியிருக்கும். அப்போது அவர்களைக் குறிக்கிட்டு ’இதைப் படிச்சியா, அதை எழுதிப் பாத்தியா..’ என இம்சை கூட்ட வேண்டாம். அவர்களாக கேட்கும் வரை அல்லது அப்படியான சூழல் தட்டுப்படும் வரை குடும்பத்தினர் எட்ட நிற்பதே நல்லது.

தேர்வுக்கு தயாராகும் மாணவர் இல்லங்கள் திடீரென புயலுக்கு முந்தைய அமைதியுடன் அச்சமூட்டும். அதை விடுத்து எப்போதும் போல இயல்பாக குடும்பம் இயங்குவதே சிறப்பு. அதற்காக பரிட்சைக்கு தயாராகும் மாணவரை தனியறையில் அமர்த்திவிட்டு, கூடத்தில் எல்லோரும் கூடி சத்தமாக பேசி சிரிப்பதோ, டிவியில் சத்தமாக சீரியல் அல்லது சினிமா பார்ப்பதோ வேண்டாம். இயல்பான அமைதியும் இணக்கமான சூழலும் வீட்டில் தவழட்டும்.

தேர்வு நாட்களில் விழுந்துவிழுந்து படிக்கிறேன் பேர்வழியென சில மாணவர்கள் இரவெல்லாம் கண்விழிப்பார்கள். தேர்வுக்கு முந்தைய நாளில் அதை எல்லாம் தவிர்ப்பது நல்லது. அதே போன்று தேர்வு நாட்களில் சத்து பானம், நினைவுத்திறன் ஊக்க மருந்து மாத்திரை என மருத்துவர் ஆலோசனையின்றி எதையும் மாணவர்களுக்கு திணிக்க வேண்டாம். மாணவர் வீட்டில் உண்ணும் வழக்கமான உணவுகள், பானங்கள் போதுமானது. விருந்து தோரணையில் எண்ணெயில் பொறித்தது, காரசாரமாய் சுவையூட்டுவது போன்றவற்றையும் தவிர்க்கலாம். ஆவியில் வெந்த உணவுகள் சிறப்பு. தேர்வு நாளில் சாப்பிடாது மாணவர் செல்வதோ, வெளி உண்வுகளை வாங்கித் தருவதோ கூடாது. அரை வயிறேனும் சாப்பிட்டு செல்வது அவசியம்.

தேர்வுக்கான தயாரிப்பு

தேர்வுக்கு முன்தினம் இரவே தேர்வறைக்குத் தேவையானதை எடுத்து வைக்க உதவலாம். பேனா, பென்சில் உள்ளிட்டவற்றை கூடுதல் எண்ணிக்கையில் வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளலாம். தொலைவது, உடைவது என எதிர்பாரா சூழலில் அவை கைகொடுக்கும். அதே போன்று தேர்வுக்கு முன்தினம், புதிய பேனா பரிசளிப்பதை பெற்றோர் தவிர்க்கலாம். புதிய பேனா என்றால் ஒருவாரம் முன்பாகவேனும் வாங்கி, அதில் எழுதி பழகிய பிறகே தேர்வறைக்கு எடுத்துச் செல்வது நல்லது. வீட்டிலிருந்து கிளம்பும் முன்னர் பாக்கெட்டுகளில் ஒருமுறை சரிபார்த்து விட்டு கிளம்பச் சொல்லலாம். தேர்வறைக்கு தேவையானவற்றை உறுதி செய்வதோடு, பாடக்குறிப்பு, ஃபார்முலா என திருப்புதலுக்காக எப்போதோ வைத்த தாள்கள் ஞாபக மறதியாக பாக்கெட்டில் தேங்கி இருக்கக்கூடும்.

தேர்வு நாளில் அட்வைஸ் மழையை அதிகம் பொழிய வேண்டாம். அப்படி ஏதேனும் இருப்பின் சற்று முன்பாகவே சுருக்கமான தெறிப்பாக சுட்டிக்காட்டுவதோடு நிறுத்திக்கொள்ளலாம். தேர்வு முடிந்து வீடு திரும்பும் மாணவரிடம், எழுதி முடித்த தேர்வு குறித்து குறுக்கு விசாரணை மேற்கொள்வதையும் தவிர்ப்போம். எழுதியதில் இருந்து தவறுகளை சுட்டிக்காட்டுவதோ, குட்டுவைப்பதோ அடுத்த பரிட்சைக்கான தயாரிப்பை பாதிக்கும். அதனால் எழுதி முடித்ததை அதிகம் ஆராயாது, அடுத்த தேர்வுக்கான தயாரிப்புக்கு வழி விடுவோம்.

எப்போது பார்த்தாலும் படிப்பு படிப்பு என மூலையில் அடைந்து கிடக்கும் போக்கை தவிர்க்கச் செய்ய வேண்டும். அது மன அழுத்தம் தர நேரிடலாம். தேர்வுக்கான தொடர் தயாரிப்பு சோர்வூட்டி, நோக்கத்தையே பாழாக்கலாம். அப்போதெல்லாம் காலாற நடக்கவோ, உலவவோ உதவலாம். தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு மன அழுத்தம் உச்சத்தில் இருக்கும். அந்த நேரத்தில் கூடுதலாக அழுத்தம் தரும் எந்த சூழலும் மாணவர்களை பாதிக்காது அரணாக தடுத்து நிற்பது அவசியம். அக்கறை பொழிகிறேன் பேர்வழி என்று, அக்கம்பக்கத்தார், உறவு, நட்பு என்ற பெயரில், சில ஆர்வக்கோளாறுகள் அடிக்கடி எட்டிப்பாத்து, படிக்கும் மாணவர்களுக்கு இடையூறு செய்ய முயல்வார்கள். அவர்களையும் நாசூக்காக அப்புறப்படுத்துவது அவசியம்.

பள்ளி மாணவ மாணவியர்

முக்கியமாக, எக்காரணம் கொண்டும் தேர்வு நாட்களில் இதர மாணவர்களுடன் ஒப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தேர்வு தருணம் மட்டுமல்ல, எப்போதும் அத்தகைய முயற்சிகள் எந்த வகையிலும் நேர்மறை தாக்கத்தை தராது. தேர்வு தினங்களில் முன்கூட்டியே வீட்டிலிருந்து கிளம்ப மாணவர்களுக்கு உதவ வேண்டும். வழியில் போக்குவரத்து இடைஞ்சலோ, வாகனப் பழுதோ குறுக்கிடக்கூடும்.

தேர்தல் நேரம் என்பதால், வீட்டுக்குள்ளே அரசியல் வம்புப் பேச்சாளர்களுக்கு இடைக்காலத் தடை போடலாம். வெளியே ஒலிப்பெருக்கியை அலற விடுவோரை தன்மையாக எடுத்துச்சொல்லி அப்புறப்படுத்தலாம்.

மதிப்பெண்கள் பெறுவதற்கு இணையாக, தேர்வுக்கால அனுபவங்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது. நேரம் தவறாமை, கவனக்குவிப்பு, திறமையை குறுகிய காலத்தில் வெளிப்படுத்துவது, கடின உழைப்பு என மதிப்பெண்ணுக்கு அப்பாலும் மாணவர்கள் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கின்றன. எனவே அவை அனைத்தையும் சுயமாகக் கற்று மாணவர்கள் தேறுவதற்கு வழிவிடுவோம். போதிய இடைவெளி விட்டு உடன் ஆதுரமாய் பயணத்தை தொடர்வோம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE