பள்ளி வளர்ச்சிக்கு மேலேண்மை சபை கூட்டம் வேண்டும்... ஏன்?

By எஸ்.கல்யாணசுந்தரம்

திருச்சி: சிறப்பு கிராம சபை கூட்டம் போன்று உலக எழுத்தறிவு தினத்தையொட்டி கல்வி மேம்பாட்டுக்காக பள்ளி மேலாண்மை சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், யுனெஸ்கோ சார்பில் 1967 முதல் ஆண்டுதோறும் செப்.8-ம் தேதி உலக எழுத்தறிவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

2009-ம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தில் பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டு, பள்ளி மேலாண்மை மற்றும் மாணவர்களின் கல்வி வளர்ச்சி ஆகியவற்றில் சமுதாயம், பெற்றோர்களது பங்களிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இக்குழு பள்ளியின் மேம்பாட்டுத் திட்டங்களை தயாரித்து, அவற்றின் செயல்பாட்டை கண்காணித்து வருகிறது. கிராமங்களின் வளர்ச்சிக்காக கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுவது போன்று, கல்வியின் அவசியம், மாணவர்களின் கல்வி உரிமை குறித்து விவாதித்து, முடிவெடுக்கும் வகையில் பள்ளி மேலாண்மை சபை கூட்டத்தை உலக எழுத்தறிவு தினமான செப்.8-ம் தேதி ஆண்டுதோறும் நடத்த வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

எஸ்.சிவகுமார்

இதுகுறித்து கல்வியாளரும், காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன ஓய்வுபெற்ற முதல்வருமான எஸ்.சிவகுமார் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: தமிழகத்தில் கிராமத்தின் வளர்ச்சிக்காக குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட 6 நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இவற்றில், கல்வி சார்ந்த விவாதங்கள் நடைபெற்றாலும், முழுமையாக கல்வி வளர்ச்சிக்கான, பள்ளி மேம்பாட்டுக்கான, மாணவர்களின் நலனுக்கான ஒரு கூட்டத்தை உலக எழுத்தறிவு தினமான செப்.8-ம் தேதியோ அல்லது ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் ஒரு விடுமுறை நாளிலோ பள்ளி மேலாண்மை சபை கூட்டம் என அனைத்து ஊராட்சிகளிலும் பொது இடத்தில் நடத்த வேண்டும்.

இக்கூட்டத்தில், அனைத்து வகை பள்ளிகளின் பிரச்சினைகள், அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகள், சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் கல்வி உரிமையை நிலைநாட்டுவதற்கான வாய்ப்புகள், இடைநிற்றலை தவிர்த்தல், கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் பங்களிப்பு, பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்து விவாதங்களை மேற்கொண்டு, தீர்மானங்களை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்கலாம்.

இந்த கூட்டத்தில், அனைத்து பெற்றோர்கள், அந்தந்த கிராமத்தைச் சேர்ந்த பள்ளிகளின் ஆசிரியர்கள், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், மாணவர்கள் ஆகியோரை பங்கேற்கச் செய்ய வேண்டும். குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகள், போட்டித் தேர்வுகள் மூலம் கல்வி உதவித் தொகை பெறும் வழிமுறைகள் குறித்து இதில் எடுத்துரைக்க வாய்ப்பு ஏற்படும்.

அரசுப் பள்ளிகள் தவிர பிற பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு இல்லாத காரணத்தால், அந்த பள்ளிகளின் கல்வி நிலை குறித்தும் மக்கள் அறிந்து கொள்ள இந்த கூட்டம் வழிவகுக்கும். எனவே, இதற்கான முயற்சிகளை அரசும், பள்ளிக் கல்வித் துறையும் எடுக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE