பள்ளி மாணவர்களுக்கு ரூ.1.25 லட்சம் வரை கல்வி உதவித்தொகை! எப்படி விண்ணப்பிப்பது? ஆகஸ்ட் 10 கடைசி தேதி!

By காமதேனு

மத்திய அரசின் கல்வி உதவித் தொகைப் பெற விரும்புகிறவர்கள் ஆக.10-ம் தேதிக்குள் அதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது.

மத்திய அரசின் இளம் சாதனையாளா்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தமிழகத்தை சோ்ந்த இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின் தங்கியவா்கள், சீா்மரபினர் மற்றும் பழங்குடியின பிரிவுகளைச் சோ்ந்த 3093 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.

9 மற்றும் 10- ம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவா்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விண்ணப்பதாரா்களின் பெற்றோா் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரா்கள் தேசியத் தோ்வு முகமை நடத்தும் நுழைவுத் தோ்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தோ்வு செய்யப்படுவாா்கள். இத்தேர்வுக்கு ஆக.10- ம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆக.12 முதல் 16-ம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம். இதற்கான எழுத்துத் தோ்வு செப்.29-ம் தேதி நடைபெறும்.

மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் கைப்பேசி எண், ஆதாா் எண், ஆதாா் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை இணைக்க வேண்டும். மறக்காமல் இந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்து மத்திய அரசின் கல்வி உதவித் தொகையை பெற தவறாதீர்கள் மாணவர்களே.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE