12ம் வகுப்பு துணைத் தேர்வர்கள் நாளை முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்! எப்படி விண்ணப்பிப்பது.. முழு விபரம்!

By காமதேனு

பன்னிரண்டாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதியவர்கள் மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கேட்டு நாளையும் நாளை மறுதினமும் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மே மாதம் 12ம் தொடங்கி நடைபெற்றது. இதில், மொத்தம் 8,06,277 மாணவர்கள் தேர்வெழுதினர். அவர்களில் 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். பொதுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு கடந்த ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் துணைத் தேர்வுகள் நடைபெற்றன.

இத்தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ள நிலையில் துணைத் தேர்வில், தகுதியான மதிப்பெண் வழங்கவில்லை என்று மாணவர்கள் கருதினால் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் கேட்டு விண்ணப்பிக்கலாம்.

இதற்கு, தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் சென்று 24.08.2022 (புதன்கிழமை) மற்றும் 25.08.2022 (வியாழக்கிழமை) ஆகிய நாட்களில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பாடத்திற்கும் விடைத்தாள் நகல் கேட்டு பெறுவதற்கான கட்டணம் ரூ. 275 ஆகும். ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள் நகலை பெற்றுக் கொண்ட மாணவர்கள், தங்களுக்கு மதிப்பெண்கள் கூடுதலாக வர வாய்ப்புள்ளது என்று நினைத்தால் மறுக்கூட்டல்/மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்.

உயிரியல் பாடத்திற்கு மறுக்கூட்டல் கட்டணமாக ரூ.305ம், ஏனைய பாடங்களுக்கு ரூ. 205ம் செலுத்த வேண்டும். கூடுதல் மதிப்பெண்கள் கிடைத்தால், அதன் அடிப்படையில் திருத்தப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE