உயர்கல்விக்கு ரூ.4 லட்சம் வரை பிணையமின்றி கல்வி கடன் பெறலாம்: வங்கி அதிகாரிகள் கூட்டத்தில் தகவல்

By இல.ராஜகோபால்

கோவை: அனைத்து வங்கி அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (மே 22) நடந்தது.

மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமை வகித்த இக்கூட்டத்தில் கோவை சுற்றுவட்டார பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட கடும் வறட்சி குறித்தும் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள், விவசாய கடன் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் வங்கிகளில் பெற்ற தொழில் கடன் தவணை நிலுவைக் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேற்குறிப்பிட்ட பிரிவுகளை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு பாரத ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட கடன் மறு சீரமைப்பு திட்டங்கள் கிடைக்கும் வகையில் மாநில அளவிலான வங்கியாளர் குழுவிற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

உயர்கல்வி பயில விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளின் நலனுக்காக வங்கிகள் சார்பில் கல்விக் கடன் வழங்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இதற்கென சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. கல்விக்கடன் பெற விரும்புவோர் www.vidyalakshmi.co.in / www.jansamarth.in ஆகிய இணையதளங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முன், பதிவேற்றும் வகையில் மாணவர் மற்றும் பெற்றோரின் பான், ஆதார் அட்டை, கல்லூரியில் கவுன்சிலிங் தேர்வு கடிதம், பெற்றோரின் வருமான சான்று, கட்டண விபரம் ஆகிய ஆவணங்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

கல்விக்கடன் பெற ரூ.4 லட்சம் வரை எவ்வித பிணையமும் இல்லாமல் மாணவர், பெற்றோர் கையெழுத்திட்டு கடன் பெற்றுக் கொள்ளலாம். ரூ.4 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை பிணையதாரர் ஒருவர் கையெழுத்திட்டபின் கடன் வழங்கப்படும். ரூ.7.50 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சொத்தின் அடிப்படையில் கடன் வழங்கப்படும். இவை முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில், படிக்க செல்லும் மாணவர்களுக்கும் கடன் வசதி உண்டு.

பெற்றோரின் வருமானம் அடிப்படையில், தகுதியுள்ள மாணவர்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படுகிம். உயர் கல்விக்கடன் கிடைக்க தாமதம் ஆகும் பட்சத்தில், வங்கியில் இருக்கும் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளிக்கலாம். அதிலும் தாமதம் ஆனால், வங்கியின் மண்டல மேலாளரிடம் புகார் தெரிவிக்கலாம். இக்கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் ஜிதேந்திரன் உள்ளிட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE