அரசுப் பள்ளிகளில் வாரந்தோறும் மன்றங்கள் சார்ந்த போட்டிகள்: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

By சி.பிரதாப்

சென்னை: அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறு மன்றங்கள் சார்ந்த போட்டிகளை வாரந்தோறும் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: "தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் வானவில் மன்றம், இலக்கிய மன்றம், சுற்றுச்சூழல் மன்றம், வினாடி-வினா உள்ளிட்ட பல்வேறு மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி அளவிலான மன்றச் செயல்பாடுகள் மற்றும் போட்டிகள் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வியாண்டு நாள்காட்டியில் ஒதுக்கப்பட்ட பாடவேளைக்கு ஏற்றபடி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடத்தப்பட வேண்டும்.

இந்தச் செயல்பாடுகள் வாராந்திர அடிப்படையில் நடத்தப்படுவது அவசியம். இந்த மன்றங்கள் சார்ந்த போட்டிகள் பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் நடைபெறும். இதில் அதிக அளவிலான மாணவர்களை பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வொரு மாதத்திலும், வாரந்தோறும் நடத்தப்பட வேண்டிய போட்டிகளின் கால அட்டவணை வடிவமைக்கப்பட்டு இந்த சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

போட்டிகள் நடைபெறுவதை முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அனைத்து வகை மன்ற போட்டிகளையும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடத்திட வேண்டும்" என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE