கொடுத்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றக்கோரி ஆசிரியர்கள் முற்றுகை...போராட்ட தேதி மாற்றம்!

By காமதேனு

'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் நாளை நடத்தப்பட இருந்த முற்றுகை போராட்டம் பிப்.19-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வித்துறை வளாகம்

கடந்த 2009-ம் ஆண்டுக்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 'சமவேலைக்கு சமஊதியம்' திமுக ஆட்சிக்கு வந்ததும் வழங்கப்படும் என அந்தக் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் உறுதி அளித்திருந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் அது நிறைவேற்றப்படவில்லை.

எனவே இக்கோரிக்கையை வலியுறுத்தி எஸ்எஸ்டிஏ சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் சென்னை நுங்கம்பாக்கம் கல்வி வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, ஏற்கெனவே அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை 3 மாதங்களுக்குள் முதல்வரிடம் ஒப்படைக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். ஆனால், 4 மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும் அரசு சார்பில் இதற்கான குழு அமைத்து ஓராண்டாகியும் கோரிக்கையை நிறைவேற்றுவதில் எந்தவித முன்னேற்றமும் இருப்பதாக தெரியவில்லை என்று ஆசிரியர்கள் வருத்தப்பட்டனர்.

பள்ளிக் கல்வித்துறை வளாகம்

எனவே, 'சமவேலைக்கு சமஊதியம்' கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்.12 முதல் சென்னை நுங்கம்பாக்கத்தில் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் தொடா் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் போராட்டம் நடைபெறும் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் ஜே.ராபா்ட் போராட்டம் ஒத்திவைப்பு குறித்த தகவலை தெரிவித்துள்ளார். "நாளை நடைபெற இருந்த முற்றுகைப் போராட்டம் தற்போதைய நிர்வாக காரணங்களால் பிப்.19-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE