பழங்குடியின மாணவர்களின் கல்விக்காக கிள்ளை பேரூராட்சி சீரிய முயற்சி!

By க. ரமேஷ்

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சி பகுதியில் தளபதி நகர், எம்ஜிஆர் நகர், சிசில் நகர், கலைஞர் நகர், கிரீடு நகர் உள்ளிட்ட பகுதியில் இருளரின பழங்குடியினர் சுமார் ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.

இவர்கள் எலி பிடித்தல், மீன் - இறால் பிடித்தல் ஆகிய தொழில்களை செய்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் கல்வி அறிவு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் எம்ஜிஆர் நகரில் அரசு (இருளர் நல) நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.

நம் வீட்டுப் பிள்ளைகளைப் போல், அவர்களை பள்ளிக்கு வரவழைத்து படிக்க வைப்பது என்பது அத்தனை இலகுவான விஷயம் இல்லை. கிள்ளைபேரூராட்சி நிர்வாகம் சார்பில்ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் இப்பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு மாலை அணிவித்து, தலையில் கிரீடம் சூட்டி, ஊர்வலமாக அழைத்துச் சென்று பள்ளியில் சேர்க்கின்றனர்.

கல்வியின் முக்கியத்துவம் குறித்து இந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துரைக்கின்றனர். அரசின் சலுகைகள் குறித்து விரிவாக எடுத்து கூறப்படுகிறது. இப்படியாக 8-ம் வகுப்பு வரை படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள், படிப்பைத் தொடராமல் மீண்டும் மீன்பிடித் தொழிலுக்குச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

கடந்தாண்டில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 8 பழங்குடி இருள இன மாணவர்களை, நடப்பு கல்வியாண்டின் தொடக்கத்தில் கிள்ளை பேரூராட்சி தலைவர் மல்லிகா முத்துக்குமார், பேரூராட்சி துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் ஒன்றிணைந்து மாலை அணிவித்து, மேளதாளம் முழங்கிட ஊர்வலமாக அழைத்து சென்று, அதே பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பில் சேர்த்தனர்.

9, 10,11 மற்றும் 12-ம் வகுப்புகளில் இப்பகுதியைச் சேர்ந்த இருளர் இன மாணவர்கள் 150 பேர் இந்த மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். இவர்களில் 36 பேர் (சமீபத்தில் சேர்க்கப்பட்ட 8 மாணவர்களை சேர்த்து) கடந்த சில நாட்களாக பள்ளிக்கு வருவதில்லை. பள்ளி தரப்பில் இருந்து இதுதொடர்பாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கிள்ளை பேரூராட்சி தலைவர் மல்லிகா முத்துக்குமார், பேரூராட்சி துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் ஆகியோர் அந்த மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று, பெற்றோரிடம் தொடர்ந்து கல்வி பயில்வதால் ஏற்படும் நற்பலன்களை விளக்கினர்.

மேலும் தமிழக அரசு தற்போது கொண்டு வந்துள்ள ‘தமிழ்ப் புதல்வன்’ கல்வி உதவித் தொகை திட்டம் உள்ளிட்ட அரசு பள்ளிகளில் பயில்வோருக்காக காத்திருக்கும் எண்ணற்ற வாய்ப்புகளை எடுத்துரைத்தனர்.

இதன்பிறகு மீண்டும், 6 மாணவர்கள் பள்ளிக்கு தொடர்ந்து வரத் தொடங்கி யிருக்கின்றனர். கிள்ளை பேரூராட்சி துணைத் தலைவர் ரவீந்திரனிடம், மீதம் உள்ள மாணவர்களின் நிலை குறித்து கேட்ட போது, “ஒரு காலத்தில் பாம்பு பிடிப்பதும் எலி பிடிப்பதுமே தொழிலாக இருந்து வந்தவர்கள். தற்போது மீன்பிடித்தொழிலை செய்து வருகின்றனர்.

இங்குள்ள சிறார்களை முதற்கட்டமாக 8-ம் வகுப்பு வரையில் படிக்க வைத்ததே ஒரு சாதனையான நிகழ்வுதான். ‘கற்றலின் இனிமை’ என்பதை உணர்த்தி, வளர் இளம் பருவத்தினரை மேல்நிலைக் கல்வியை நோக்கி நகர்த்துவதில், படித்த சமூகத்தின் மத்தியிலேயே பல சிக்கல்கள் உள்ளன.

பள்ளிக்குச் செல்வது என்பது ஒரு தவிர்க்க இயலாத, தவிர்க்கவே கூடாத ஒரு விஷயம் என்பதை பிற பகுதிகளில் உள்ள மாணவர்கள் மத்தியில் இச்சமூகம் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்து விட்டது. இதனால் நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் கூட, பள்ளி கல்வியில் இடை நிற்பது பெரும்பாலும் குறைவாக உள்ளது.

ஆனால், இந்தப் புரிதல் இங்குள்ள மாணவர்களுக்கு மிகவும் குறைவு. அவர்களை பண்படுத்தி, கற்றலின் பயனை உணர்த்தி 6 மாணவர்களை மீண்டும் அழைத்து வந்திருக்கிறோம். மீதமுள்ளவர்களை பள்ளி நோக்கி வரவழைக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்” என்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE