கிருஷ்ணகிரி - சிந்தகம்பள்ளி அரசு தொடக்கப் பள்ளியில் வலுவிழந்த கட்டிடத்தால் மாணவர்கள் அச்சம்!

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே சிந்தகம்பள்ளி அரசு தொடக்கப் பள்ளியில் வலுவிழந்த நிலையில் உள்ள வகுப்பறை கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு, புதிய கட்டிடம், கழிப்பறை, தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி அருகே மகாராஜாகடை நாரலப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சிந்தகம்பள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சிந்தகம்பள்ளி, நாரலப்பள்ளி, ஏரிக்கரை, மேல்வீதி, கீழ்வீதி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு தலைமையாசிரியர் உட்பட 2 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

அச்சத்துடன் மாணவர்கள்: இப்பள்ளி ஒரே கட்டிடத்தில் 2 வகுப்பறைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வகுப்பறை கட்டிடத்தில் மழைக் காலங்களில் தரைப்பகுதியில் தண்ணீர் கசிந்து வருகிறது. மேலும், மேற்கூரை பகுதியில் உள்ள சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுவதால், மாணவ, மாணவிகள் அச்சத்துடன் வகுப்பறையில் இருக்கும் நிலை உள்ளதாக மாணவர்களின் பெற்றோர் குற்றம்சாட்டினர்.

இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சேகர் மற்றும் மாணவர்களின் பெற்றோர் சிலர் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி வகுப்பறை கட்டிடம் கடந்த 1994-ம் ஆண்டு கட்டப்பட்டது. இக்கட்டிடத்தில் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

சிந்தகம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீர்.

சுற்றுச்சுவர் சேதம்: தற்போது பெய்த மழைக்கு நீர் முழுவதும் வகுப்பறையில் கசிந்ததால் அங்கு வைக்கப்பட்டிருந்த பாடப் புத்தகங்கள், மாணவர்களின் நோட்டுகள் சேதமானது. இதேபோல, பள்ளி வளாகத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச் சுவரும் சேதமாகி உள்ளது.

மேலும், பள்ளியில் மாணவிகளுக்கென கடந்த 2011-12-ம் ஆண்டு கழிப்பறை கட்டப்பட்டது. இக்கழிப்பறை தற்போது சேதமாகிப் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி உள்ளதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், விஷஜந்துகள் அடிக்கடி வகுப்பறைக்குள் நுழைந்து விடுகின்றன. இதனால், பள்ளிக்கு வர மாணவர்கள் அச்சப்படுகிறனர்.

வகுப்பறை கட்டிடத்தின் மேற் கூரை பகுதி சிமென்ட்
பூச்சு உதிர்ந்து வலுவிழந்த நிலையில் உள்ளது.

ஆய்வு செய்ய வேண்டும்: இதுதொடர்பாக ஆட்சியர் முதல் தொடர்புடைய அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை. எனவே, பள்ளியை ஆட்சியர் ஆய்வு செய்து, வலுவிழந்த வகுப்பறை கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு, புதிய கட்டிடம், கழிப்பறை, தடுப்புச் சுவர் வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும், பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்குவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE