குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு வெற்றி பெற்றவர்களுக்கு பிப்ரவரி 12-ம் தேதியிலிருந்து நேர்முகத் தேர்வுகள் தொடங்கும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
குரூப் 2 மற்றும் 2 ஏ பணிநிலைக்கான தேர்வுகள் கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கடந்த 2023-ம் ஆண்டு முதன்மை தேர்வுகள் நடைபெற்றது. ஆனால், இந்த தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தொடர்ந்து அரசு பணியாளர் தேர்வாணையம் காலம் தாழ்த்தி வந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி 11-ம் தேதி தேர்வில் வெற்றி பெற்றவர்களின் எண்கள் வெளியிடப்பட்டன.
அதில் நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்ட தேர்வர்களின் பதிவெண்களை மட்டும் வெளியிட்டனர். தேர்வில் வெற்றி பெற்றவர்கள் எப்போது நேர்முகத் தேர்வு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்தனர். நேர்முகத் தேர்வு நடைபெறும் செய்திகளை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி 161 பதவிகளுக்கான நேர்முகத் தேர்வு பிப்ரவரி 12-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி நடைபெறும் என தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. யார் யாருக்கு எந்த தேதிகளில் நேர்முகத் தேர்வு என்பது டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.