தான் கல்வி பயின்ற சென்னை ஐஐடிக்கு ₹ 110 கோடியை நன்கொடையாக வழங்கி அசத்தியுள்ளார் அதன் முன்னாள் மாணவரான பிரபல தொழிலதிபர்.
சென்னையில் உள்ள பிரபல கல்வி நிறுவனமான ஐஐடியில் பயின்ற முன்னாள் மாணவரான சுநீல் வாத்வானி தற்போது ஐ-கேட் மற்றும் மாஸ்டெக் டிஜிட்டல் நிறுவனங்களின் இணை நிறுவனராக உள்ளார். இந்நிலையில் சென்னை ஐஐடியில் தரவு அறிவியல் (டேட்டா சயின்ஸ்) மற்றும் செய்யறிவு தொழில்நுட்பம் (ஆர்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ்) சார்ந்த பாடப்பிரிவுகளுக்கு என, ரூ. 110 கோடி மதிப்பீட்டில் புதிதாக கல்வி வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டது.
இதுகுறித்து கேள்விப்பட்ட சுநீல் வாத்வானி அதற்கான முழு செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் முன்னிலையில், சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி மற்றும் சுநீல் வாத்வானி இடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
இதனையடுத்து புதிதாக அமையவுள்ள கல்வி வளாகத்திற்கு வாத்வானி ஸ்கூல் ஆஃப் டேட்டா சயின்ஸ் மற்றும் ஏஐ என அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய சுநீல் வாத்வானி, "உலகிலுள்ள முன்னணி செய்யறிவு தொழில்நுட்பம் சார்ந்த கல்வி வளாகங்களுள் ஒன்றாக விளங்குவதை இலக்காக கொண்டு இந்த புதிய மையம் செயல்படும். அரசு மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு, தரவு அறிவியல் மற்றும் செய்யறிவு சார்ந்த துறைகளில் தேவைப்படும் உதவிகளை இந்த மையம் வழங்கும்" என்று தெரிவித்தார்.
இதற்கு முன், இந்தியாவில் உள்ள எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் அங்கு கல்வி பயின்ற எந்தவொரு முன்னாள் மாணவரும் இவ்வளவு அதிகமான தொகையை நன்கொடையாக வழங்கியதில்லை என்பது வரலாற்றில் பதியப்பட வேண்டிய செய்தி.