‘‘உங்களுடன் நீங்கள் போட்டியிட வேண்டும்; மற்றவர்களுடன் அல்ல’’ என்று தேர்வெழுதும் மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.
ஆண்டுதோறும் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுடன் தேர்வை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். அதன்படி, தேர்வெழுதும் மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 2.26 கோடி பேர் பதிவு செய்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பல பகுதிகளிலும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடையே பிரதமர் மோடி பேசியதாவது: தங்கள் பிள்ளைகளின் ரிப்போர்ட் கார்டை (மதிப்பெண் அட்டை), அவர்களின் விசிட்டிங் கார்டு என பெற்றோர்கள் கருதக் கூடாது. தங்கள் பிள்ளைகளை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பேசக் கூடாது. அவ்வாறு ஒப்பிடுவது அவர்களின் எதிர்காலத்துக்கு தீங்கு விளைவிப்பதாக அமைந்துவிடும். ஆசிரியர்கள் தங்கள் பணியை வெறும் வேலையாக எடுத்துக் கொள்ளாமல் மாணவர்களின் முன்னேற்றத்துக்கு தேவையானவற்றை செய்ய வேண்டும். மாணவர்களின் பிரச்சினைகளை ஆசிரியர்கள் கேட்டறிந்து அவற்றைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவர்களே, வாழ்க்கையில் போட்டி இருக்க வேண்டும். அதேநேரம், உங்களிடம் நீங்களே போட்டியிட வேண்டும். மற்றவர்களுடன் அல்ல. மாணவர்கள் மூன்று விதமான அழுத்தங்களுக்கு உள்ளாகிறார்கள். ஒன்று, சக மாணவர்கள் மூலமாக ஏற்படுவது. இரண்டாவது, பெற்றோர் மூலமாக ஏற்படுவது. மூன்றாவது, சுயமாக ஏற்படுவது. தாங்கள் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்றால், மாணவர்கள் தங்களைத் தாங்களே நொந்துகொள்கிறார்கள். தேர்வுக்குத் தயாராகும்போது சிறிய இலக்குகளை நிர்ணயித்து படிப்படியாக செயல்திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு செயல்பட்டால் தேர்வுக்கு முன்பே நீங்கள் முழுமையாக தயாராகிவிடுவீர்கள்.
இன்றைய மாணவர்கள்தான் நாளைய இந்தியாவை வடிவமைக்கப் போகிறவர்கள். இன்றைய மாணவர்கள் முன் எப்போதையும்விட புதுமையான எண்ணங்களை அதிகம் கொண்டிருக்கிறார்கள். திட்டமிட்டு செயல்பட்டால் உங்களால் இலக்கை அடையமுடியும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இதையும் வாசிக்கலாமே...
'வானத்தில் ஆச்சரியம்'... தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட் செய்த புகைப்படம் வைரல்!
நடிகர் விஜய் கட்சியின் பெயர் 'தமுகவா'?...வெளியான பரபரப்பு தகவல்!
மோனாலிசா ஓவியத்தின் மீது சூப் வீச்சு... பருவநிலை ஆர்வலர்களால் பரபரப்பு!
பொன்முடி வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நோட்டீஸ்.. உச்ச நீதிமன்றம் அதிரடி!