7.5% உள்ஒதுக்கீட்டில் சேரும் அரசு பள்ளி மாணவர்களிடம் எவ்வித கட்டணங்களும் வசூலிக்க கூடாது

By KU BUREAU

சென்னை: தமிழகத்தில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களிடம் எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தொழில்நுட்பக் கல்வி ஆணையர் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையர் டி.ஆபிரகாம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசு பள்ளிகளில் படித்து பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை சாளர முறையில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு இடங்களில் சேரும்மாணவர்களின் கல்வி செலவினங்களான, படிப்புக் கட்டணம், விடுதிக்கட்டணம் அல்லது போக்குவரத்துக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் தமிழக அரசே வழங்கும் என உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களிடம் எவ்விதமான கட்டணங்களையும் வசூலிக்கக் கூடாது என்று அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு, அரசு உதவி பெறும் தொழிற்கல்லூரிகள், தனியார் சுயநிதி தொழிற்கல்லூரிகளில் ஒற்றை சாளர கலந்தாய்வு மூலம் சேர்க்கை பெறும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு கல்வி கட்டண சலுகை வழங்கப்படும் என்றும் உயர் கல்வித்துறை ஏற்கெனவே தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் , பொறியியல் கல்லூரிகளில் சேரும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, தனியார் சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீடு செய்யும் இலவச மற்றும் கட்டண இருக்கைகளில் சேரும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ மதம் மாறிய மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் உள்ளவர்களுக்கு கட்டாய, திருப்பி செலுத்தப்படாத அனைத்துக் கல்வி கட்டணங்களும் வழங்கப்படும் எனவும் உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அக்கட்டணங்கள் அனைத்தும் வங்கிக்கணக்கில் வரவு வைப்பதற்கான முன்பாக அவர்களிடம் எந்தவித கட்டணங்களையும் வசூலிக்கக் கூடாது. இதை மீறும்பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE