தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: விண்ணப்பங்கள் சரிபார்ப்பு பணிகள் தீவிரம்

By சி.பிரதாப்

சென்னை: தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் விவரங்களை ஆகஸ்ட் 19-ம் தேதிக்குள் சரிபார்க்க வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

நம்நாட்டில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் சிறந்த ஆசிரியரை தேர்வு செய்து ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது’ வழங்கி தமிழக அரசு கவுரப்படுத்தி வருகிறது. இந்த விருது பெறுபவர்களுக்கு ரூ.10,000 ரொக்கம், வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

நடப்பாண்டு 342 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், 38 தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஆங்கிலோ இந்திய பள்ளிகள், சமூக பாதுகாப்பு துறை பள்ளிகள், மாற்றுத்திறனாளி ஆசிரியர்களில் தலா 2 பேர் என மொத்தம் 386 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 16 முதல் 29-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த விருதுக்கு ஏராளமான ஆசிரியர்கள் எமிஸ் தளம் வழியாக விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில்: “டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு எமிஸ் தளம் மூலம் விண்ணப்பித்த ஆசிரியர்களின் விவரங்களை மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆகஸ்ட் 9-ம் தேதிக்குள் சரிபார்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதேநேரம் பணிகள் இன்னும் முடிவடையாததால் அதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

இதையடுத்து விண்ணப்பங்கள் சரிபார்ப்பை அலுவலர்கள் துரிதமாக முடிக்க வேண்டும். அதன்பின் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான மாவட்ட தேர்வுக் குழு ஒவ்வொரு ஆசிரியருக்கும் விதிகளின்படி மதிப்பெண் வழங்கி எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்து இறுதிசெய்ய வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்கள் பின்னர் தெரிவிக்கப்படும். இந்த விவகாரத்தில் எவ்வித புகாருக்கும் இடமளிக்காதவாறு பணிகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE