மாணவர்களை ஒருங்கிணைக்கும் வாக்கி-டாக்கி: கோவை பள்ளியில் அசத்தல்!

By ஆர்.ஆதித்தன்

கோவை: உலகெங்கும் ராணுவம் மற்றும் காவல்துறையில் மட்டுமே வாக்கி- டாக்கி பயன்படுத்தப்பட்டு வந்தது. ரேடியோ அலைவரிசை மூலம் இயங்கும் வாக்கி-டாக்கிகள் இப்போது வணிக வளாகங்கள், திரையரங்குகள், பெரு நிறுவன அலுவலகங்கள் மற்றும் வனத்துறை, மாநகராட்சி உட்பட பல்வேறு துறைகளில் தகவல் ஒருங்கிணைப்புக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் போன்கள் வந்த போதிலும் குறிப்பிட்ட பகுதிகளில் தகவல் தொடர்பை ஒன்றிணைக்கும் சிறந்த தொழில்நுட்பமாக வாக்கி-டாக்கி விளங்குகிறது.

இப்படி பிரபலமாக உள்ள வாக்கி -டாக்கி, கோவையில் உள்ள டி.ஏ.ராமலிங்கம் செட்டியார் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை ஒழுங்குபடுத்துவதில் முக்கியப் பங்காற்றி வருகிறது.

கிரிக்கெட் போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட வாக்கி -டாக்கி இப்போது பள்ளி திறப்பு, மூடும் நேரம் மட்டுமில்லாமல் பள்ளி வளாகத்தில் மாணவர்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு நடைமுறைக்கு உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, பள்ளி தலைமையாசிரியர் ராதாமணி, உதவி தலைமையாசிரியர் அருளானந்தம் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் சங்கர் கணேஷ் ஆகியோர் கூறியதாவது: கோவை டி.ஏ.ராமலிங்கம் செட்டியார் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ளது. இங்கு சுமார் 748 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். எங்கள் பள்ளி சார்பில் ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

கிரிக்கெட் போட்டியில் ரன், அவுட் தொடர்பான விவரங்களை துல்லியமாகப் பெற அம்பயர்களுக்காக 4 வாக்கி -டாக்கி வாங்கி பயன்படுத்தி வந்தோம். இதனை வாங்க முன்னாள் மாணவர்கள் உதவினர்.

கிரிக்கெட் போட்டி நேரம் தவிர்த்து வாக்கி-டாக்கி பயன்பாடு இல்லாமல் வந்தது. எனவே, வாக்கி-டாக்கியை பள்ளி திறப்பு, மூடும் நேரங்கள், பள்ளி வளாகத்தில் இடைவேளை, மதிய உணவு வேளை, விளையாட்டு நேரங்களில் மாணவர்களை ஒழுங்குபடுத்துதல் போன்றவைகளுக்காகப் பயன்படுத்த திட்டமிட்டோம்.

இப்பள்ளியில் தேசிய மாணவர் பாதுகாப்புப் படையில் (என்சிசி) 100 பேரும், சாலை பாதுகாப்பு பிரிவில் (ஆர்எஸ்பி) 50 பேரும் உள்ளனர். அந்த மாணவர்கள் மூலம் காலை பள்ளி திறக்கும் நேரம் மற்றும் பள்ளி முடியும் நேரத்தில் சாலையில் போக்குவரத்து நெரிசலை கையாள்வதும், சாலையோரங்களில் தாறுமாறாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை முறைப்படுத்துதல், ஹெல்மெட் அணிய வலியுறுத்துதல் போன்றவைகளுக்காக பயன்படுத்தி வருகிறோம்.

முதலில் 4 ஆக இருந்த வாக்கி - டாக்கி எண்ணிக்கையை இப்போது 8 ஆக உயர்த்தியுள்ளோம். இதன் மூலம் பள்ளி வளாகத்தில் உள்ள மாணவர்களை கையாள்வது எளிதாக உள்ளது. இதில் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் மூலம் வாக்கி-டாக்கி தகவல் தொடர்பு மாணவர்களோடு ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வாக்கி-டாக்கி பயன்பாடு மூலம் மாணவர் களை கொண்டே, இதர மாணவர்களை நெறிப்படுத்துவது போன்ற பணிகளில் ஈடுபடும் மாணவர்களின் தலைமைப்பண்பு வளரும். இதில் தன்னார்வமாக வந்து மாணவர்கள் செயல்படுவது வரவேற்கத்தக்கது.

அதேபோல விழா நேரங்களில் முக்கிய விருந்தினர் வருகை போன்ற தகவல்கள் வாக்கி - டாக்கி மூலம் பெறப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் எளிதில் கையாளும் வகையில் எடை குறைவாகவும், ஒரு வாரம் வரை சார்ஜ் நிற்கும் வகையிலும் வாக்கி-டாக்கி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE