டிஎன்பிஎஸ்சி-யின் புதிய தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம்! 

By KU BUREAU

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ், வருவாய் நிர்வாக ஆணையராக பணிபுரிந்து வந்தார். இவர் பொறுப்பேற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை பதவியில் இருப்பார் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, தமிழக உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, டிஎன்பிஎஸ்சி தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவின் பெயரை தமிழக அரசு பரிந்துரைத்திருந்தது. ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி, டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை தமிழக அரசு பின்பற்றவில்லை என்று கோப்புகளை திருப்பி அனுப்பினார். இதையடுத்து, உரிய கோப்புகளுடன் தமிழக அரசு மீண்டும் பரிந்துரை அனுப்பியது. ஆனாலும், அதனை ஏற்க ஆளுநர் முன் வராமல் இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே காலியாக இருந்து வந்தது. டிஎன்பிஎஸ்சிக்கு, புதிதாக 9 உறுப்பினர்கள் கடந்த பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது தலைவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம் செய்யப்படுகிறார். பதவியேற்ற நாளில் இருந்து அடுத்த 6 ஆண்டுகள் அல்லது 62 வயது அல்லது இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை அவர் பதவியில் இருப்பார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE