விருதுநகர்: ராஜபாளையம் அருகே அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டினர்.
ராஜபாளையம் அருகே முகவூர் முத்துசாமிபுரத்தில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த 10 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
கடந்த 2 மாதங்களாக இப்பள்ளிக்கு ஆசிரியர் இல்லை. மதிய உணவும் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் குழந்தைகளுடன் வந்த பெற்றோர் நேற்று புகார் அளித்தனர்.
அப்போது, அவர்கள் கூறுகையில், பள்ளி செயலாளர் பொறுப்பு குறித்து நிர்வாகத்தினரிடையே பிரச்சினை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதனால் பள்ளியில் பணியாற்றி வந்த ஓர் ஆசிரியரும் கடந்த 2 மாதங்களாக பணிக்கு வரவில்லை. அதோடு, பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்படவில்லை.
» நிதி மோசடி புகார் - சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் திருச்சியில் கைது!
» வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்குப் பதிவு!
கடந்த 2 மாதங்களாக ஆசிரியர் இல்லாத பள்ளிக்கு குழந்தைகள் சென்று வருகிறார்கள். இதனால், அவர்களது கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு பள்ளியில் ஆசிரியரை நியமிக்கவும், குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.