அரசு பள்ளியில் சேர்ந்து தமிழ்வழி கல்வி பயிலும் வடமாநில குழந்தைகள் @ திருப்பூர்

By KU BUREAU

உடுமலை: வட மாநிலங்களில் இருந்து பிழைப்பு தேடி உடுமலைக்கு புலம்பெயர்ந்து கோழிப்பண்ணைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் குழந்தைகள், அரசுப் பள்ளிகளில் சேர்ந்து தமிழ் வழியில் கல்வி கற்று வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டாரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிராய்லர் கோழிப்பண்ணைகள் இயங்கி வருகின்றன. அவற்றை பராமரிக்கும் பணியில் வட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உடுமலை அடுத்த ஜே.என்.பாளையம் கிராமத்தில் கடந்த 1962-ம் ஆண்டு முதல் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியை ஒட்டிய கோழிப் பண்ணைகளில் தங்கி பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து, கல்வி கற்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சுமார் 30 பேர் அப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இருவேளை உணவு விநியோகிக்கப்பட்டு வருகிறது. பிற மொழிகளை தாய்மொழிகளாக அவர்கள் கொண்டிருந்தாலும், அவர்களுக்கு தமிழக அரசு பாடத்திட்டப்படி தமிழில் பாடம் நடத்தப்படுகிறது. அவற்றை அக்குழந்தைகளும் விரும்பி கற்று வருகின்றனர்.

இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறும் போது, ‘‘வடமாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் இருப்பது எங்கள் பள்ளியில் தான். அவர்களுக்கு தமிழிலேயே பாடம் நடத்தப்படுகிறது. பிற குழந்தைகளைப் போலவே அவர்களும் ஆர்வமுடன் பாடங்களை கற்கின்றனர்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE