கடந்த காலாண்டு புள்ளி விவரங்களின் அடிப்படையில், உயர்கல்விக்காக கனடா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 86% குறைவு கண்டுள்ளது.
இந்தியா - கனடா இடையே அண்மையில் எழுந்த உரசல்கள் தற்போது சற்றே ஓய்ந்திருக்கின்றன. எனினும் அதன் எதிரொலிப்புகள் குறைந்தபாடில்லை. அவற்றில் ஒன்றாக இந்திய மாணவர்களின் உயர்கல்வி இலக்குகளில் ஒன்றாக இருந்து வந்த கனடா, இப்போது அந்த நிலையிலிருந்து வழுவி உள்ளது.
காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு கனடா அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் ஆதரவளிக்க ஆரம்பித்ததில், இந்தியா - கனடா இடையிலான முதல் மோதல் எழுந்தது. இந்தியாவிலிருந்து வெளியேறி கனடாவில் அடைக்கலம் புகுந்து அங்கே குடியுரிமை பெற்ற, சீக்கியர்களின் வாக்குகளை கவரும் நோக்கில் அவர்களுக்கான ஆதரவு நிலைப்பாட்டை கனடா ஆட்சியாளர்கள் தொடர்ந்து வருகின்றனர்.
இவற்றில் கனடா குடிமகனான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற காலிஸ்தான் பிரிவினை ஆதரவாளர் அங்கு கொல்லப்பட்டது தொடர்பாக, இந்தியா - கனடா இடையிலான உரசல் மோசமானது. இதனையடுத்து பரஸ்பரம் தூதுவர்களை திரும்பப்பெற உத்தரவிட்டது உட்பட பல்வேறு கசப்பான நிகழ்வுகள் அரங்கேறின. இந்த நெருக்கடி சூழல் தற்போது சற்றே தணிந்திருப்பினும், பக்கவிளைவுகள் தம்மை வெளிக்காட்டி வருகின்றன.
அவற்றில் ஒன்றாக கனடாவில் படிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 86% குறைவு கண்டுள்ளது. வெளிநாடுகளில் உயர்கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்களின் முதல்கட்டத் தேர்வுகளில் அமெரிக்காவுக்கு இணையாக கனடா பல்கலைக்கழங்களும் உள்ளன. இருதரப்பு உறவின் அடையாளமாக கனடாவில் உயர்கல்வி பெறும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதன் மத்தியில் தற்போது அது திடீர் சரிவு கண்டுள்ளது.
இதற்கு இந்தியா - கனடா என இரு நாடுகளுமே காரணமாகி உள்ளன. இந்தியா உட்பட வெளிநாட்டு மாணவர்களுக்கான உயர்கல்வி அனுமதியை குறைத்திருப்பதாக கனடா அறிவித்துள்ளது. அதிலும், இந்திய மாணவர்களுக்கான தணிக்கையை கனடா கூட்டியுள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் செல்வாக்கு கனடாவில் அதிகரித்ததில், அங்கு உயர்கல்விக்கு மாணவர்களை அனுப்புவதில் இந்திய பெற்றோர் அதிகம் தயங்க ஆரம்பித்தனர்.
இவை அனைத்துமாக சேர்த்து, டிசம்பருடன் முடிந்த கடந்த காலாண்டில், கனடாவில் உயர்கல்வி பயிலச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 86 சதவீதம் குறைவு கண்டுள்ளது. இந்த சரிவானது தற்போதைக்கு மீள வாய்ப்பில்லை என்றும் தெரிய வருகிறது. இதனால் கனடா அல்லாத இதர வெளிநாட்டுக் கல்லூரிகளில் பயில் இந்திய மாணவர்கள் தயாராகி வருகின்றனர். இந்தியா - கனடா இடையிலான பதற்றம் மட்டும் தீர்க்கப்படாது உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
புகழ் குன்றா பொன்மனச் செம்மல் |எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் ஸ்பெஷல்!
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு புகைப்படங்கள்!
ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ட்விட்டர் பக்கம் முடக்கம்!
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்!
கலித்தொகையில் இருக்கிறது ஜல்லிக்கட்டு... அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்!