அரசு பள்ளிகளில் 10 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலி: உடனடியாக நிரப்ப கல்வியாளர்கள் வேண்டுகோள்

By KU BUREAU

சென்னை: பள்ளிக்கல்வித் துறையில் பொது மாறுதல் கலந்தாய்வு முடிந்த நிலையில் அரசுப் பள்ளிகளில் சுமார் 10 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு கடந்த ஜூலை 1 முதல் 31-ம் தேதி வரைநடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொண்டு தாங்கள் விரும்பிய மாவட்டங்கள், ஒன்றியத்துக்குள் இடமாறுதல் பெற்றனர்.

ஒட்டுமொத்த கலந்தாய்வின் முடிவில் அரசுப் பள்ளிகளில் 5,786 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 892, திருவண்ணாமலையில் 720, திருப்பூரில் 500, தருமபுரியில் 413, புதுக்கோட்டையில் 379, சேலத்தில் 289 ஆசிரியர்காலிப் பணியிடங்கள் உள்ளன. அதேநேரம் சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆசிரியர் காலியிடங்கள் எதுவும் இல்லை.

இதேபோல், அரசுப் பள்ளிகளில்முதுநிலை ஆசிரியரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள், பட்டதாரி ஆசிரியரில் 2,600 வரை இடங்கள் என ஒட்டுமொத்தமாக தமிழக அரசுப் பள்ளிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாகஇருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுதவிர தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் பள்ளிகளில் 2,000 ஆசிரியர்கள் வரை கூடுதலாக தேவைப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2,582 பட்டதாரி ஆசிரியர் மற்றும் 2,768 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக 5,368 காலியிடங்கள் வரை நிரப்பப்படும். மீதமுள்ள இடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தகவல்தெரிவித்தனர்.

மறுபுறம் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரந்தரமாகநிரப்புவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டுமென கல்வியாளர்கள்,சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE