சென்னை: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 15 பேர் கட்-ஆப் மதிப்பெண் 200-க்கு 200 எடுத்து சாதனை படைத்துள்ளனர். விழுப்புரம் மாணவி ஜி.திவ்யா முதலிடம் பிடித்துள்ளார். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கு 14,497 பேரும், பிடெக் படிப்புகளுக்கு 3,000 பேரும் என மொத்தம் 17,497 பேர் விண்ணப்பித்தனர்.
இந்நிலையில், மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் https://adm.tanuvas.ac.in, https://tanuvas.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளங்களில் நேற்று வெளியிடப்பட்டது. பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் 15 மாணவர்கள் கட்-ஆப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்றுள்ளனர்.
அதில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஜி.திவ்யா, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவி வி.அபிஸ்ரீ, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் கே.எம்.சூர்யா, மதுரை மாவட்டத்தை சேர்ந்த மாணவி கே.அஸ்விதா, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஆர்.நவினா ஆகிய 5 மாணவ, மாணவிகள் முதல் 5 இடங்களை பிடித்துள்ளனர்.
அதேபோல், பி.டெக் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் கட்-ஆப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்று விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஜி.திவ்யா முதலிடத்தை பிடித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி பி.துர்காதேவி, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஆர்.அபிநயா, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஆர்.மனோஜ் கார்த்திக், தருமபுரி மாவட்டத்தை மாணவி எஸ்.சற்குண பிரியா ஆகியோர் கட்-ஆப் மதிப்பெண் 199.500 பெற்று அடுத்த 4 இடங்களை பெற்றுள்ளனர்.
» மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம் கட்டாய கையெழுத்து: உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு புகார்
அரசு பள்ளி மாணவர்களுக்கு பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புகளில் 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் கட்-ஆப் மதிப்பெண் 199.500 பெற்று தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர் பி.அசோக் பிரியன் முதலிடத்தை பிடித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஆர்.ராகவி (மதிப்பெண் 199), ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவர் எஸ்.உதயகுமார் (மதிப்பெண் 198,500), தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர் கே.பாலாஜி (மதிப்பெண் 198.500), ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த மாணவர் வி.ஹரிராஜ் (மதிப்பெண் 198) ஆகியோர் அடுத்த 4 இடங்களை பெற்றுள்ளனர்.
அதேபோல், பி.டெக் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் கட்-ஆப் மதிப்பெண் 196.500 பெற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவி கே.கனிமொழி முதலிடம் பிடித்தார். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஆர்.நந்தா (மதிப்பெண் 193), ஆர்.ராகவி (மதிப்பெண் 191), சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி கே.ஜனத்நிஷா (மதிப்பெண் 189.500), நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜே.எஸ்.சந்தியா (மதிப்பெண் 189) ஆகியோர் அடுத்த 4 இடங்களை பெற்றுள்ளனர். பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். விவரங்களுக்கு 044-29997348, 29997349 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.