சென்னை ஐஐடி-க்கு நன்கொடையாக ரூ.228 கோடி வழங்கிய முன்னாள் மாணவர்: `வசதியான வாழ்க்கையை தந்ததற்கு கைமாறு’ என உருக்கம்

By KU BUREAU

சென்னை: சென்னை ஐஐடி-க்கு முன்னாள் மாணவர் ஒருவர் ரூ.228 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார். தனக்கு வசதியான வாழ்க்கையை ஏற்படுத்தித் தந்த கல்வி நிறுவனத்துக்கு தான் செய்யும் கைமாறு என்று அவர் உருக்கமுடன் கூறினார்.

சென்னை ஐஐடியில் கடந்த 1970-ம் ஆண்டு எம்டெக் ஏரோஸ்பேஸ் டெக்னாலஜி படித்தவர் கிருஷ்ணா சிவுகுலா, தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் இவர், இந்தோ - எம்ஐஎம் லிமிடெட் மற்றும் சிவா டெக்னாலஜிஸ் நிறுவனங்களின் நிறுவனர் ஆவார். இவர் தான் படித்த சென்னை ஐஐடிக்கு ரூ.228 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.

இந்தியாவில் தனிநபர் ஒருவர் கல்வி நிறுவனத்துக்கு ரூ.228 கோடி நன்கொடை வழங்கியிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. அவரை கவரவிக்கும் நிகழ்ச்சி ஐஐடியில் நேற்று நடந்தது. இதில் ஐஐடி இயக்குநர் வி.காமகோடி பேசும்போது கூறியதாவது:

சென்னை ஐஐடியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர் கிருஷ்ணா சிவுகுலா ஐஐடியின் வளர்ச்சிக்கு ரூ.228 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார். இயக்குநர் என்ற முறையிலும், இங்கு பணியாற்றும் பேராசிரியர்கள், படிக்கும் மாணவர்கள் சார்பில் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அவரது நிறுவனங்கள் தயாரிக்கும் உதிரி பாகங்களை பயன்படுத்தாத விமானங்கள் உலகில் எங்கும் கிடையாது. ஒரு கல்வி நிறுவனத்துக்கு தனிநபர் ஒருவர் ரூ.228 கோடி வழங்கியிருப்பது ஐஐடி வரலாற்றில் இதுவே முதல்முறை.

அவர் வழங்கியுள்ள ரூ.228 கோடியில் 5 விதமான பணிகளை செய்ய முடிவு செய்துள்ளோம். பி.டெக் படிக்கும் சிறந்த மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்க அவரது பெயரில் பெல்லோஷிப், அதேபோல், விளையாட்டு வீரர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கவும் அவரது பெயரில் பெல்லோஷிப், ஐஐடியில் படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கவும் பெல்லோஷிப், ஐஐடி சாஸ்த்ரா தொழில்நுட்ப மலரை மாதாந்திர மலராக வெளியிடுவது, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் பேராசிரியர்களுக்கு உயர் விருது வழங்குவது என 5 பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு காமகோடி கூறினார்.

ரூ.228 கோடி நன்கொடை வழங்கிய கிருஷ்ணா சிவுகுலா பேசும்போது கூறியதாவது: நான் பி.டெக் மும்பை ஐஐடியிலும், எம்.டெக் சென்னை ஐஐடியிலும் படித்தேன். எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் எனக்கு படிக்க வாய்ப்பு தந்து எனக்கு மகிழ்ச்சியையும் வளத்தையும், வளமான வாழ்க்கையையும் தந்தது சென்னை ஐஐடி. நான் படித்த சென்னை ஐஐடி எனக்கு செலவே இல்லாமல் உயர்தரமான தொழில்நுட்ப கல்வியை தந்தது. நான் கல்விக் கட்டணம் எதுவும் செலுத்தவில்லை.

மகிழ்ச்சியையும், வளமான வாழ்க்கையையும், செல்வத்தையும் தந்துள்ள ஐஐடிக்கு சிறிய அளவில் அல்ல, பெரிய அளவில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதன் விளைவாகத்தான் இந்த நன்கொடையை அளித்துள்ளேன். நான் பி.டெக் படித்த மும்பை ஐஐடிக்கும் விரைவில் பெரிய அளவில் நன்கொடை வழங்க உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE