புதுச்சேரியில் செவிலியர் படிப்பு நுழைவுத் தேர்வை கைவிட கோரிக்கை

By KU BUREAU

காரைக்கால்: புதுச்சேரி மாநிலத்தில் செவிலியர் படிப்புக்கான சேர்க்கைக்கு, நுழைவுத் தேர்வு நடத்தும் அறிவிப்பை ரத்து செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து காரைக்கால் மாவட்ட பெற்றோர் சங்கத் தலைவர் எல்.எஸ்.பி.சோழசிங்கராயர் நேற்று முன்தினம் புதுச்சேரி முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மாநிலத்தில் பிளஸ் 2 படிப்பு முடித்த பின்னர், சென்டாக் அமைப்பு மூலம் மதிப்பெண் தரவரிசையின் அடிப்படையில் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. நீண்டகாலமாக இந்த முறையின் அடிப்படையிலேயே நர்சிங் படிப்புக்கான சேர்க்கையும் நடைபெற்று வருகிறது.

திடீரென நிகழாண்டு முதல் நர்சிங் படிப்புக்கான சேர்க்கைக்கு அடுத்த மாதம் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல், மாணவர்களிடையே பெரும் தடுமாற்றத்தையும், பெற்றோருக்கு மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டம் சரியானதல்ல. மாணவர்களும் தயார் நிலையில் இல்லை. தமிழகம், கர்நாடகா போன்றவற்றில் இத்தகைய நிலை இல்லை. எனவே, நர்சிங் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE