அரசுடன் தனியார் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: தேசிய கல்வி தொழில்நுட்ப மன்ற தலைவர்

By KU BUREAU

வேலூர்: இந்தியாவில் உயர்கல்வி விகிதத்தை உயர்த்த, அரசுடன் தனியார் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று தேசியக் கல்வி தொழில்நுட்ப மன்றத் தலைவர் அனில் டி.சஹஸ்ரபுதே வலியுறுத்தினார்.

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 39-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், இளநிலை, முதுநிலை மாணவர்கள் 8,205 பேர் பட்டமும், 357 பேர் முனைவர் பட்டமும், சிறப்பிடம் பிடித்த 65 பேர் தங்கப் பதக்கமும் பெற்றனர்.

விழாவுக்கு தலைமை வகித்துபல்கலை. வேந்தர் கோ.விசுவநாதன் பேசும்போது, ‘‘நாட்டில் 10 சதவீதம் பேர் மட்டுமே உயர்கல்வி பெறுகின்றனர். தேசிய கல்விக் கொள்கை உயர்கல்வி விகிதத்தை 50 சதவீதமாக உயர்த்த வேண்டுமென தெரிவிக்கிறது. இது சாத்தியமாக வேண்டுமெனில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம்நிதியை கல்விக்கு ஒதுக்க வேண்டும். ஆனால், அதிகபட்சம் 3 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இதனால், கல்விச் சுமையை பெற்றோரே ஏற்க வேண்டியுள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்’’ என்றார்.

கவுரவ விருந்தினராகப் பங்கேற்ற டொயோட்டோ இந்தியா நிறுவனத்தின் முதுநிலை செயல்அதிகாரி டி.ஆர்.பரசுராமன் பேசும்போது, ‘‘உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடான இந்தியா, 3-வது இடத்தை நோக்கி முன்னேறுகிறது. மேலும், இளம் தலைமுறையினர் அதிகமுள்ள நாடாகவும் இந்தியா திகழ்கிறது. ஏற்றுமதிவாய்ப்புகள் அடுத்த 10 ஆண்டுகளில் 29-30 சதவீதமாக உயரும்.

சிறு, குறு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 6.8 கோடியிலிருந்து 14 கோடியாக மாற வாய்ப்புள்ளது. சைபர் செக்யூரிட்டி, ரோபாடிக்ஸ், ஆட்டோமேஷன், ட்ரோன்கள், 3டி பிரின்டிங், சாட்ஜிபிடி, ப்ளாக் செயின் உள்ளிட்ட15 துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன’’ என்றார்.

தேசியக் கல்வித் தொழில்நுட்ப மன்றம் மற்றும் தேசிய அங்கீகார வாரியத் தலைவர் அனில் டி.சஹஸ்ரபுதே மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:

உயர்கல்விக்கு அரசு அதிக அளவில் நிதி ஒதுக்க வேண்டும். அதேநேரத்தில், தனியார் நிறுவனங்களும் பங்களிக்க வேண்டும். உயர்கல்வி விகிதத்தை அதிகரிக்க, அரசுடன் தனியார் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாணவர்கள் கல்வியுடன், தனித்திறன்கள் மற்றும் நற்பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

உயர்கல்வி பயிலும் பெரும்பாலான மாணவர்கள் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பப் பிரிவுகள் மீதே ஆர்வம் கொண்டுள்ளனர். சிவில், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் துறைகளிலும் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.

நாட்டில் 2014-ல் 400 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 1.50லட்சமாக உயர்ந்துள்ளது. சுயதொழில் மூலம் அதிக வருவாய் ஈட்டுவதுடன், பலருக்கும் வேலைவாய்ப்பு அளிக்க முடியும். எனவே,மாணவர்கள் சுயதொழில் தொடங்கஅதிக ஆர்வம் காட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், உதவி துணைத் தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன், துணைவேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் டி.ஜெயபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE