குரோம்பேட்டை / திருவள்ளூர்: செங்கை, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், ஆர்.காந்தி தொடங்கி வைத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை சார்பாக 2024-2025-ம் கல்வியாண்டில் 11-ம் வகுப்பு பயிலும் 585 மாணவ, மாணவிகளுக்கு ரூ.28.17 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளை பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி முன்னிலையில் ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, 2023–24-ம் கல்வி ஆண்டில் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய 10 பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர் வழங்கி சிறப்பித்தார்.
மேலும் குரோம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 2023–24-ம்கல்வியாண்டில் நடைபெற்ற அரசு பொது தேர்வுகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை ஊக்கப்படுத்தி இவ்வாண்டும் சிறந்த முறையில் அதிக மதிப்பெண்கள் பெற ஊக்கமளிக்கும் விதமாக ஊக்கத்தொகை, பாராட்டு சான்றிதழ்களை வழங்கி னார்.
இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர்,மேயர் வசந்தகுமாரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சொ.கற்பகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வேலாயுதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் 17,391 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் பணியை நேற்று திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் கே.இ.என்.சி அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, அவர், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகளை வழங்கினார். இந்நிகழ்வுகளில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்.பிரபு சங்கர், திருவள்ளூர், திருத்தணி எம்எல்ஏக்கள் வி.ஜி. ராஜேந்திரன், எஸ். சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் சுகானந்தம் (திருவள்ளூர்), புண்ணியகோடி (பொன்னேரி)உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.